ஊரடங்கை நீட்டிக்க அரசுக்கு எந்த ஒரு பரிந்துரையும் செய்யவில்லை!!

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு நாளையுடன் முடிவடைகிறது. இந்த நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு, கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 7ஆவது முறையாக ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில், ஐ.சி.எம்.ஆர். இணை இயக்குநர் பிரதீப் கவுர் உள்ளிட்ட மருத்துவ நிபுணர்கள் பங்கேற்றனர். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்ளிட்டோரும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர். உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் காணொலி மூலம் ஆலோசனையில் பங்கேற்றார்.

ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.சி.எம்.ஆர். இணை இயக்குநர் பிரதீப் கவுர், ஊரடங்கை நீட்டிக்குமாறு அரசுக்கு பரிந்துரைக்கவில்லை என்றும், கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார். பொது போக்குவரத்தை கட்டுப்படுத்துவதுடன், மக்கள் கூட்டம் கூடுவதை தடுக்க வேண்டும் என மருத்தவ நிபுணர்கள் தெரிவித்தனர்.

அறிகுறிகள் இருந்தால் உடனடியாக பரிசோதனை மேற்கொள்ளவேண்டும் என்றும், சென்னை மாவட்டத்தில் பின்பற்றப்பட்ட நடைமுறைகளைப் போன்று பிற மாவட்டங்களிலும் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மருத்துவ நிபுணர் குகானந்தம் தெரிவித்தார்.

Exit mobile version