கொரோனாவால் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகள் நிவாரணம் பெறுவதற்காக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள், குழந்தைகளிடையே பாகுபாட்டினை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனாவால் உயிரிழந்தவர், அரசாங்கத்திலோ அல்லது பொதுத்துறை நிறுவனங்களிலோ பணிபுரிந்திருந்தால் அவர்களின் குழந்தைகள் நிவாரணத் தொகை பெற தகுதியானவர்கள் இல்லை என்று வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். நிவாரண உதவி என்பது குழந்தைகளின் எதிர்காலத்திற்கும், அவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் உதவக்கூடிய ஒன்று என்பதால், இதில் பெற்றோரின் வேலைவாய்ப்பினை ஓர் அளவுகோலாக எடுத்துக் கொள்வது பொருத்தமாக இருக்காது என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவுறுத்தியுள்ளார்.