5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வில் 100 சதவிகிதம் தேர்ச்சி பெறுவார்கள் எனவும், அது குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை எனவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே, பெரியகொடிவேரி பேரூராட்சிக்குட்பட்ட பாரதி வீதி, காமராஜர்வீதி உள்ளிட்ட 8 வீதிகளில் 65 லட்ச ரூபாய் மதிப்பில், வடிகால் வசதியுடன் புதிய தார்ச்சாலைகள் அமைக்கப்பட உள்ளன. அதற்கான பூமிபூஜை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அந்நிய முதலீடுகள் மூலம், தமிழகத்தில் 10 லட்சம் பேருக்குப் புதிய வேலை வாய்ப்புக்கள் கிடைக்கும் நிலையை உருவாக்கி உள்ளார் என்று தெரிவித்தார். மேலும், ஏழை குழந்தைகளின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக கொண்டுவரப்பட்டுள்ள 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வில், மாணவர்கள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெறுவார்கள் என்றும் அது குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.