மருத்தவர்கள், சுகாதாரத்துறையினர், ஊடகத் துறையினர், மத்திய-மாநில அரசுப் பணியாளர்களுக்கு இ-பதிவு முறை கட்டாயமில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னையின் பல்வேறு பகுதிகளில், ஊடகத்துறையினருக்கு இ-பதிவு இருந்தால் மட்டுமே வாகனத்தில் செல்ல அனுமதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டனர். கொரோனா பெருந்தொற்று காலத்தில், முன்களப் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் தடுக்கப்படுவது தொடர்பாக, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பல்வேறு பத்திரிகையாளர் அமைப்புகள் வலியுறுத்தின. இதனைத் தொடர்ந்து, தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ஊடகத்துறையினருக்கு இ-பதிவு முறை அவசியம் இல்லை என தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர்கள் தங்கள் அடையாள அட்டையைப் பயன்படுத்தி தமிழகம் முழுவதும் பயணிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மருத்துவர்கள், சுகாதாரத்துறையினர், உடகத்துறையினர் ஆகியோருக்கு இ-பதிவு முறையில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அத்தியாவசியப் பணியாளர்கள், மத்திய மாநில அரசுப் பணியாளர்கள், தலைமைச் செயலக அலுவலர்கள், தூதரக அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்கள் ஆகியோருக்கு இ-பதிவு முறை அவசியமில்லை என கூறப்பட்டுள்ளது. அவர்களுக்கு அடையாள அட்டை போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.