புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மரணத்தின் விளிம்பில் இருந்த நோயாளியை, தீவிர சிகிச்சை மூலம் குணமடைய வைத்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கம்மங்காடு பகுதியைச் சேர்ந்த 26 வயதான சின்னாத்தாள் என்பவர், நோய்த் தொற்றுக் காரணமாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கடந்த அக்டோபரில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், இரத்தத்தில் நோய் தொற்றுக் காரணமாக நுரையீரல், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் ஆகியவற்றின் செயல் குறைந்து இருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து தொடர் சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள் குழு, சில நாட்கள் செயற்கைசுவாசம் அளித்த நிலையிலும் முன்னேற்றம் இல்லை. இதையடுத்து மேலும் பல சிறப்பு மருத்துவர்களை அழைத்து, அதாவது 28 மருத்துவர்களை கொண்ட குழு, ஒரு மாதத்திற்கு செயற்கை சுவாசம் அளித்து காப்பாற்றியுள்ளனர். மொத்தமாக 42 நாட்கள் சிகிச்சைக்குப் பின்னர், சின்னாத்தாள் தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளது, அரசு மருத்துவர்களின் சாதனையாகவும், மருத்துவத்துறையில் உள்ள கடமை உணர்ச்சி மற்றும் அர்பணிப்பு உணர்வின் அடையாளமாகவும், மருத்துவ வல்லுநர்களால் வியந்து பார்க்கப்படுகிறது.