மக்கள் சேவையில் உள்ள அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட உரிமையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர். பின்னர், அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலையில், பணிமாறுதல் தொடர்பாக அரசு மருத்துவர் பாலசுப்பிரமணியன் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. அதில், மக்கள் சேவையில் உள்ள அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட உரிமையில்லை என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபடாமல், அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்ட உயர் நீதிமன்றம், அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு பரிசீலிக்குமாறு அறிவுறுத்தியது.