தனியார் பள்ளிகளின் மோகம் பெற்றோர்கள் மத்தியில் அதிகரித்துள்ள இந்த காலகட்டத்தில், அதற்கு இணையாக அரசு சார்ந்த கல்வி நிலையங்களும் செயல்படுகின்றன என்பதற்கு சான்றாக ஜோலார்பேட்டையில் செயல்படும் அங்கன்வாடி மையம் உள்ளது. இதுகுறித்த சிறப்பு தொகுப்பை தற்போது காணலாம்…
தமிழகத்தில் 54 ஆயிரத்து 439 அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன. இங்கு பயிலும் குழந்தைகள் ஆரம்ப கால கல்வி கற்பதற்கான சூழல், குழந்தைகள் பாதுகாப்பு, ஆரோக்கியம் முழுவதுமாக கண்காணிக்கப்படுகிறது. அங்கன்வாடியில் 5 வயதை நிறைவு செய்து தொடக்கப் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு முன்பருவ கல்வி நிறைவு சான்றிதழ் வழங்கும் திட்டத்தை 2017ம் ஆண்டு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சிக்குட்பட்ட 17 வார்டுகளில் 22 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக 17வது வார்டு பஜனை கோயில் தெருவில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் 35 குழந்தைகள் படித்து வருகின்றனர்.
குழந்தைகளுக்கு ஒவ்வொரு தினமும் வகை வகையான உணவுகள் வழங்கப்படுகிறது. தக்காளி, பருப்பு, எலுமிச்சை சாதங்களும், காய்கறி சாதங்களுடன் வாரத்தில் மூன்று நாட்களுக்கு முட்டையும் கொடுக்கப்படுகிறது. இந்த மையத்தில் பணிபுரியும் ஆசிரியை ஜெய்கிரேஸ் மேக்தலின் என்பவர் காலை முதல் மாலை வரை குழந்தைகளை தன் குழந்தைகள் போல் பாராமரித்து வருகிறார்.
12 மாதங்களும் குழந்தைகளுக்கான பாடத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வரும் அவர், தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் வகையில் இங்குள்ள குழந்தைகள், கல்வி, அறிவு, ஒழுக்கம் மற்றும் விளையாட்டுளில் சிறந்தவர்களாக திகழ்கின்றனர்.
இந்த மையத்தில் சமையலராக பணியாற்றி வரும் சுமித்ரா என்பவரும் சமையலறையை தன் வீடு போல் தூய்மையாக வைத்துள்ளார். குறித்த நேரத்தில் உணவுகள் தாயார் செய்து குழந்தைகளுக்கு பரிமாறுகிறார். எனவே, இந்த அங்கன்வாடி மையத்தில் எந்த அச்சமும் இல்லாமல் குழந்தைகளை அனுப்பி வைக்கும் பெற்றோர்கள் வேலைக்கு கவலையற்று சென்று வருகின்றனர்.