நவரசங்கள் நிறைந்த நக்கல் மன்னன் – கவுண்டமணியின் 82வது பிறந்த தினம் இன்று

தமிழ் சினிமா உலகில் நக்கலான நகைச்சுவைகளுக்கு பெயர் போனவர், நாயகர்களையும் தனது காமெடியால் கலாய்த்து ரசிகர்களை சிரிக்க வைத்தவர் கவுண்டமணி, அவரின் 82வது பிறந்தநாள் இன்று.

 

1939ஆம் ஆண்டு கோவை மாவட்டம் வல்லகுண்டம் கிராமத்தில் பிறந்த கவுண்டமணி, துவக்க காலங்களில் பல மேடை நாடகங்களில் நடித்து வந்தார். நாடக கலைஞராக இருந்து சினிமாவில் அறிமுகமான அவர், நகைச்சுவைக் காட்சிகளில் யாரும் பின்பற்றாத புதிய பாணியை கையாண்டார். சமூகத்தில் நடக்கும் அவலங்களையும் அதன் பின்னணியையும் பகடி செய்யும் அவரின் வசனங்கள் ரசிகர்களின் வயிறுகளை பதம் பார்த்தன.

வாழ்க்கையை எப்படி மகிழ்ச்சியாக அனுபவிக்க வேண்டும் என்பதையும் கவுண்டமணி தனது காமெடியால், ரசிகர்களுக்கு பாடமெடுத்தார் என்றுதான் சொல்ல வேண்டும். வைத்தியரான அவரிடம் நூறு நாட்கள் வாழ என்ன செய்ய வேண்டும் என்று சந்தேகம் எழுப்பும் பாத்திரத்தை நோக்கி, அவர் கேட்கும் கேள்விகளும், அதற்கு அளிக்கும் விளக்கங்களும் அல்டிமேட் ரக யதார்த்தமான வாழ்க்கைத் தத்துவங்கள்.

அதேபோல விரக்தியுடனும் வெறுமையுடனும் சுற்றித் திரிபவர்களுக்கு ஆல் இன் ஆல் அழகுராஜாவாக அவர் காட்டிய வழிகள் அனைத்தும், கவலைகளை மறந்து சிரித்து மகிழவைக்க கூடியவைகள்.

தமிழ் சினிமா என்பது நாயகர்களின் பிம்பத்தால் கட்டமைக்கப்பட்ட பிரமாண்டம் என்ற கூற்றை சுக்குநூறாக உடைத்தெறிந்ததும் கவுண்டமணியே!. பஞ்ச் வசனங்களும், அடுக்குமொழி வசனங்களும் ஹீரோக்களுக்கு மட்டுமே என காணப்பட்ட மமதைகள் கவுண்டமணியின் கவுண்டர்களுக்கு முன்னால் காணாமல் போனது. நாயகர்களை தனது டைமிங்க் காமெடியால் பகடி செய்வதும், அவர்களது நாயகத்தன்மையை கேள்வி கேட்பதும் கவுண்டணிக்கு கைவந்த கலை.

கவுண்டமணி என்றாலே அனைவருக்கும் உடனடியாக நினைவுக்கு வருவது செந்தில் தான். நகைச்சுவை இரட்டையர்கள் என பெயரெடுத்து இருவரும் திரையில் தோன்றினால் என்ன நடக்கும் என்பதை கேட்கவே வேண்டாம். இவர்களின் வாழைப்பழம் காமெடியும், இதுவரை யாரென்றே தெரியாத சொப்பன சுந்தரியும் ரசிகர்களின் ஆல்டைம் பேவரைட்.

மூடநம்பிக்கை, முதாளித்துவம், அரசியல், அதிகாரம், ஆணாதிக்கம் போன்றவைகளால் சமூகத்தில் நிகழ்ந்த அனைத்து அவலங்களையும், தனது காமெடியால் தோலூரித்துக் காட்டிய நக்கல் மன்னன் கவுண்டமணிக்கு வாழ்த்து கூறி மகிழ்கிறது நியூஸ் ஜெ.

Exit mobile version