இலங்கையில் புதிய அதிபராக கோத்தபய ராஜபக்ச நாளை பதவியேற்பு

இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள கோத்தபய ராஜபக்சே புதிய அதிபராகத் திங்கட்கிழமை பதவியேற்க உள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே 69 லட்சத்து 24 ஆயிரத்து 255 வாக்குகள் பெற்றார். சஜித் பிரேமதாசா 55 லட்சத்து 64 ஆயிரத்து 239 வாக்குகள் பெற்றார். பதிவான வாக்குகளில் கோத்தபய ராஜபக்சே 52 விழுக்காடு வாக்குகளும், சஜித் பிரேமதாசா 42% வாக்குகளும் பெற்றுள்ளனர். இதனால் 13 லட்சத்து 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றதாக அந்நாட்டுத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் வெற்றிபெற்ற கோத்தபய ராஜபக்சே திங்கட்கிழமை காலை அநுராதபுரத்தில் நடைபெறும் விழாவில் புதிய அதிபராகப் பதவியேற்க உள்ளார். ஆளுங்கட்சி வேட்பாளர் தேர்தலில் தோல்வியடைந்ததை அடுத்து ரணில் விக்கிரமசிங்கே பிரதமர் பதவியில் இருந்து விலக உள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர் பதவி விலகினால் அமைச்சரவையும் தானாகக் கலைந்துவிடும். இதனால் கோத்தபய அதிபராக பதவியேற்றதும் புதிய அமைச்சரவையை நியமிப்பார். புதிய பிரதமராகத் தினேஷ் குணவர்த்தனேயை நியமிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இரு நாடுகளிடையே உள்ள உறவை மேலும் வலுப்படுத்துவதற்கு இணைந்து செயல்பட விரும்புவதாகவும் மோடி குறிப்பிட்டுள்ளார். நமது மண்டலத்தின் பாதுகாப்பு, அமைதி, வளம் ஆகியவற்றுக்கு சகோதரத்துவ உணர்வுடன் இணைந்து பாடுபடுவோம் எனவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version