ஹேக்கர்கள் அதிமாகிவிட்டனர்; ஒரே கடவு சொல்லை பயன்படுத்த கூடாது – கூகுள்

இணைய சேவைகளைப் பயன்படுத்தும் பலர் கடவுச் சொற்களில் அலட்சியமாக இருப்பது கூகுள் நிறுவனத்தின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஜிமெயில் உள்ளிட்ட இணையதள சேவைகளைப் பயன்படுத்துபவர்கள் தங்கள் தகவல்களின் பாதுகாப்புக்கு பாஸ்வேர்டுகள் எனப்படும் கடவுச் சொற்களையே நம்பி உள்ளனர்.

உலகெங்கும் இணையத்தில் ஹேக்கர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ள சூழலில், இந்த கடவுச் சொற்கள் கடினமானவையாக இருந்தால் மட்டுமே தகவல்களைப் பாதுகாக்க முடியும். இந்த இக்கட்டான சூழலில் கூட இணையப் பயன்பாட்டாளர்களில் பலர் கடவுச் சொற்களில் அலட்சியமாக உள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுமார் 2 கோடி கூகுள் கணக்குகளை ஆராய்ந்த கூகுள் நிறுவனம் அவற்றில் 3 லட்சம் கணக்குகளின் கடவுச்சொற்கள் எளிதாக யூகிக்க கூடியவையாக இருந்ததாக கூறியுள்ளது. இப்படியாக அலட்சியம் காட்டுபவர்கள் கவனமாக இருக்கவும் கூகுள் அறிவுறுத்தி உள்ளது.

கடவுச் சொற்களில் கவனமாக இருப்பது எப்படி:

கடவுச் சொற்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்றிக் கொண்டே இருப்பது நல்லது. 3 மாதங்களுக்கு ஒருமுறை கடவுச் சொல்லை மாற்றுவது சிறப்பு.

கடவுச் சொற்களாக உங்கள் பெயரையோ உங்கள் உறவினர் அல்லது நண்பர்களின் பெயரையோ வைப்பதைத் தவிர்க்கவும். அப்படி வைத்தால் ஹேக்கர்கள் எளிதாக யூகித்துவிடுவார்கள். சிலர் பாஸ்வேர்டு என்ற ஆங்கிலச் சொல்லையோ பிற பிரபல ஆங்கில சொற்களையோ கடவுச் சொற்களாக வைப்பார்கள் – இதுவும் பாதுகாப்பானது அல்ல.

கடவுச் சொல் எட்டு அல்லது அதற்கு மேற்பட்ட எழுத்துகளைக் கொண்டிருப்பது நல்லது. அதிக எழுத்துகளே அதிக பாதுகாப்பு.

கடவுச் சொற்கள் முழுவதும் எண்ணாலோ, எழுத்தாலோ இருப்பது பாதுகாப்பானது அல்ல. பாதி எழுத்துகள், பாதி எண்கள் சில சிறப்புக் குறியீடுகள் என்று இருப்பது சிறப்பு. தேவைப்பட்டால் கேபிடல் லெட்டர், ஸ்மால் லெட்டர் – என்ற வேறுபாட்டையும் கடவுச் சொற்களில் பயன்படுத்தலாம்.

ஒருமுறை பயன்படுத்திய கடவுச் சொல்லை மீண்டும் பயன்படுத்தாமல் இருந்தாலே உங்கள் கணக்குகள் பாதுகாப்பாக இருக்கும் என கூறுகின்றனர் கணிணி வல்லுநர்கள்.

Exit mobile version