இன்றைய கூகுளை நீங்கள் கவனித்தால் ஒரு மனிதன் முதலையோடு இருப்பது போன்ற டூடுளை வைத்திருக்கும். இந்த கால குழந்தைகளுக்கு இவரைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவர்தான் முதலை வேட்டையாடுபவர் என்றழைக்கப்படும் ஸ்டீவ் இர்வின். இந்த முதலை மனிதனை 90களின் காலகட்டம் பிறந்தவர்கள் வரை நிறைய பேருக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.
ஸ்டீவ் இர்வின், விலங்குகள் மீது கொண்ட அன்பால் , ஆஸ்திரேலியாவின் மிருகக்காட்சிசாலைக்கு தனது வாழ்க்கைப் பணியை அர்ப்பணித்துக் கொண்டார். இதற்கு காரணம் அவரது பெற்றோர் பாப் மற்றும் லின் இர்வின். ஸ்டீவ்-ன் 6வது பிறந்தநாளுக்கு அவரது பெற்றோர் 11 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பரிசாக கொடுத்தார்கள். அதற்கு பின் அவரது குடும்பம் குயின்ஸ்லாந்து நகரத்திற்கு குடிபெயர்ந்தது. அங்கு அவரது தந்தை குடும்ப பூங்கா ஒன்றை ஆரம்பித்தார்.
ஸ்டீவ் இர்வின் குடும்ப பூங்காவை நிர்வகிக்கத் தொடங்கினார், ரீப்டைல் என பெயரிடப்பட்ட அந்த பூங்கா பின்னர் ஃபானா பார்க் என மறுபெயரிடப்பட்டது. இறுதியில் ஆஸ்திரேலியாவின் உயிரியல் பூங்காவாக மாறியது தனிக்கதை.
ஸ்டீவ் இர்வினுக்கு 9 வயதாக இருக்கும்போது , குயின்ஸ்லாந்தின் கிழக்கு கடலோர முகாமில் தன்னார்வலராக இருந்தபோது, முதன்மையான உயிரினமாகவும், அழிந்துபோகக் கூடிய நிலைமையிலும் இருந்த உப்புநீரை முதலைகளை கைப்பற்றினார்.
அவரது மிருகக்காட்சி சாலைக்கு பார்வையிட வந்த டெர்ரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவர்கள் தங்களது தேனிலவு பயணத்தை வனங்களில் முதலைகள் பிடிப்பதில் செலவிட்டனர்.
அந்த தேனிலவு பயணத்தின் முதலை வேட்டையாடும் காட்சிகள் பிரபல தொலைக்காட்சியில் ஸ்டீவ் இர்வின் மற்றும் டெர்ரி இர்வின் ஆகியோர் “CROCODILE HUNDER” என்ற பெயரில் நிகழ்ச்சியை வழங்கினர்.அவர்களை தொடர்ந்து அவர்களது குழந்தைகள் ராபர்ட் மற்றும் பிண்டி ஆகியோர் தொடர்ச்சியான போட்டியாளர்களாகவும் ஆனார்கள். சுமார் 100 க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து நிகழ்ச்சியைக் காணும் சுமார் 500 மில்லியன் மக்கள் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்வையிட்டனர்.
2001 ஆம் ஆண்டு ஸ்டீவ் இர்வினுக்கு வாழ்நாள் சேவைக்கான விருது வழங்கப்பட்டது.
அவரது பல சாதனைகளை நிகழ்த்தியிருந்தாலும் அவரின் அரிய வகை சாதனையாக ”எல்சியா இர்வினி” என்று பெயரிடப்பட்ட புதிய ஆமை இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
ஸ்டீவ் இர்வினுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 15 ஸ்டீவ் இர்வின் தினமாக கொண்டாடப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் நடக்கும் இந்த நிகழ்ச்சியானது ஆஸ்திரேலியாவின் உயிரியல் பூங்காவின் வனவிலங்கு வாரியர்ஸ் திட்டத்திற்குநிதி திரட்டும் நிகழ்ச்சியாகப் பயன்படுத்தப்படுகிறது.
2006ம் ஆண்டு தனது மகளின் நிகழ்ச்சிக்காக ஆழ்கடலில் ஆவணப்படப்பிடிப்பில் இருந்தபோது திருக்கை போன்ற ஒரு மீனின் தாக்குதலால் மரணித்துப் போனதாக தகவல் வெளியானது. அவரின் மரண நிகழ்வுக்கு பின் சில வாரங்கள் அவர் தொகுத்து வழங்கிய “CROCODILE HUNDER” நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகி முடிவுற்றது.
காலங்கள் இவர் போன்ற மனிதனை நிச்சயம் போற்றும். அதற்கு கூகுள் மட்டும் விதிவிலக்கா என்ன! அதனால் தான் ஸ்டீவ் இர்வின் பிறந்தநாளான இன்று டூடுள் வைத்து சிறப்பித்துள்ளது.