உலகின் தலை சிறந்த நிறுவனமான கூகிள், பணியாளர்களுக்கு புதிய சட்ட திட்டங்கள் குறித்து இமெயில் ஒன்றை அனுப்பி உள்ளது.
உலகின் சிறந்த பணியாற்றும் சூழலைக் கொண்ட கூகிள் ப்ளெக்ஸில் (Google Plex)ல், வாழ்நாளில் ஒருமுறையாவது பணியாற்றிவிட வேண்டும் என்ற ஏக்கம், டெக் உலகைச் சேர்ந்த அனைவருக்கும் இயல்பாகவே இருக்கும். இந்நிலையில், கூகிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, கூகிள் பணியாளர்களுக்கு, நிறுவனத்தின் புதிய சட்டதிட்டங்கள் குறித்து இமெயில் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், புதிய செய்தி குறித்து விவாதிப்பதோ, அரசியல் குறித்து பேசுவதோ, அந்த நாளை மோசமாக்குமேயன்றி, ஒற்றுமையை வளர்க்காது. நமது முக்கியமான கடமை, நாம் ஒவ்வொருவரும் எதற்காக இந்நிறுவனத்தில் எடுக்கப்பட்டிருக்கிறோமோ அதை செய்வதற்கே; வேலை சம்பந்தமில்லாதவற்றைப் பற்றி விவாதிப்பதற்கல்ல” என்று அந்த மெயிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் யாரையும் கேலி செய்யாதிர்கள், யாரைப்பற்றியும் பேசி தனிமனித தாக்குதல்களில் ஈடுபடாதீர்கள்; உங்கள் சக பணியாளர்களிடம் மரியாதையாக பேசுங்கள் என்று பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. கூகிளில் பணியாற்றுவது என்பது மிகப்பெரிய பொறுப்பு என்றும், நமது தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் தனித்தன்மை மற்றும் நம்பிக்கை விமர்சனத்திற்குள்ளாகியிருக்கிறது. பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நெறிமுறைகள் எல்லாம் அதிகாரப்பூர்வமான கொள்கைகள்; அவைகள் எல்லாம் கூகிள் அலுவலகத்தில் பணியாற்றும் சமயங்களில் பின்பற்றப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு கூகிள் தன் பணியாளர்களை சர்ச்சைக்குறிய தலைப்புகளில் பேசவோ, விவாதிக்கவோ தனது பணியாளர்களை அனுமதித்திருந்தது. தற்போது அரசியல் அழுத்தங்கள் அதிகமாகியுள்ளதால், கூகிள் நிறுவனம் நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதன் காரணமாகவே தனது பணியாளர்கள் அரசியல் பேசுவதற்கும், விவாதிக்கவும் தடைவிதித்துள்ளது. அதோடு, இவருக்கு வாக்களியுங்கள் அல்லது வாக்களிக்காதீர்கள் என்று ஒரு வேட்பாளருக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ கூட்டத்தை சேர்க்கக்கூடாது, பொதுவாழ்க்கையில் இருக்கும் யாரையும் அவமதிக்கவோ, அவமானப்படுத்தவோ, அல்லது கெட்டப்பெயரை உருவாக்கவோ முயற்சி செய்யக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.
உலகின் மிக ஜனநாயக முறையிலான பணியாற்றும் சூழலைக் கொண்டிருந்த கூகிள் நிறுவனத்திலும் அரசியல் புகுந்து, பேச்சுரிமையையும், ஜனநாயகத்தையும் சுருக்கியிருப்பது சமூக ஆர்வலர்களிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.