சிவன் கோயில் திருப்பணியின் போது கிடைத்த தங்கப் புதையல்!

ஆண்டுகால பழமையான சிவன் கோயில் திருப்பணியின் போது, நாயக்கர் காலத்து தங்கப் புதையல் கண்டெடுக்கப்பட்டது, அந்த பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரமேரூரில், பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட குழம்பரேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. மிகவும் சிதிலமடைந்த இந்த பழங்காலத்து கோயிலை புதுப்பித்து, கும்பாபிஷேகம் நடத்த, ஊர் பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக கோயில் கருவறையின் படிக்கட்டுகளை திருப்பணிக் குழுவினர் அகற்றியுள்ளனர். அப்போது, கருங்கற்களுக்கு கீழ் துணியால் சுற்றப்பட்ட சிறிய அளவிலான மூட்டை ஒன்று இருந்துள்ளது. அவற்றை பிரித்து பார்த்த போது, சுமார் 1 கிலோ எடைகொண்ட தங்க நாணயங்கள், ஆபரணங்கள் இருந்ததை கண்டு, திருப்பணிக் குழுவினர் திகைத்துள்ளனர். கண்டெடுக்கப்பட்ட தங்கப் புதையல், 16 ஆம் நூற்றாண்டின் நாயக்கர் காலத்து தங்க ஆபரணங்கள் என கூறப்படுகிறது. அன்னியர் படையெடுப்பின் போது, சுவாமி சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்க ஆபரணங்களை, முன்னோர்கள் பதுக்கி வைத்திருக்கலாம் என தெரிகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரி, தங்கத்தை கைப்பற்றுவதற்காக சென்றுள்ளார். அப்போது, தங்கத்தை ஒப்படைக்க முடியாது என்றும், தங்கத்தை கோயில் திருப்பணி செலவிற்கு பயன்படுத்தவுள்ளதாகவும் கூறி, பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, வருவாய்த்துறை அதிகாரி திரும்பிச் சென்றார்.

இதனிடையே தங்கப் புதையலை ஒப்படைக்க ஊர் பொதுமக்கள் மறுத்து வரும் நிலையில், பழங்கால தங்க நாணயங்கள், ஆபரணங்களை போலீசார் உதவியுடன் மீட்டு அரசு கருவூலத்தில் ஒப்படைக்க காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version