தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து ஒரு சவரன் ஆபரண தங்கம் 38 ஆயிரம் ரூபாயை கடந்து விற்பனையாகி வருகிறது. இது ஏழை, நடுத்தர மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இப்போதைக்கு தங்கம் விலை குறைய வாய்ப்பே இல்லை என்று தங்க நகை விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் சர்வதேச அளவில் ஒரு சில துறைகளை தவிர பெரும்பாலான துறைகளின் வளர்ச்சியை தவிடுபொடியாக்கியாக்கியுள்ளது. ஊரடங்கால் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் கடுமையாக பாதித்துள்ள நிலையில் தங்கம் விலை மட்டும ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.
கடந்த 4 மாதங்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு 8 ஆயிரம் ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளது. ஊரடங்கு காலத்தில் பெரும் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீதான முதலீடுகளை அதிகரித்ததே அதன் விலை உயர்வுக்கு காரணம் என மெட்ராஸ் நகை வைர விற்பனையாளர் சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் தெரிவித்துள்ளார்.
இரும்பு, கச்சா எண்ணெய், பங்கு சந்தைகள் என பெரு முதலீட்டாளர்களின் முதலீடுகள் ஒட்டுமொத்தமாக தங்கத்தின் மீது திரும்பியுள்ளதால், தங்கத்தின் விலை என்பது தொடர்ந்து உயர்ந்துகொண்டே இருக்கும் என்றும், இந்த மாத இறுதியில் ஒரு சவரன்
ஆபரண தங்கம் 39 ஆயிரத்தை தொடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
தங்கத்தை போன்று வெள்ளியின் விலையும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஒரு கிலோ வெள்ளியின் விலை 65 ஆயிரம் ரூபாயை தொட்டுள்ளது. தங்கமும், வெள்ளியும் வளரும் நாடுகளில் ஆபரணபாக பார்க்கப்பட்டு
வரும் நிலையில், வளர்ந்த நாடுகளில் முதலீடுகளாகவே பார்க்கப்படுகிறது. இதன் காரணத்தாலயே வளர்ந்த நாடுகளில் உள்ள பெரும் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடுகளை செலுத்திவருகின்றனர்.