தமிழக மக்களுக்கு தங்கத்தின் மீதான மோகம் வரையறுக்க முடியாத ஒன்று. தங்கத்தின் விலை உயரும் போது கவலையோடு பேசிக்கொள்வார்கள். ஆனால் அப்படி கவலைபடுபவர்களை அடுத்த நாளே நகைகடையில் பார்க்க முடியும் .
தங்கத்தின் விலை உயர உயர பறந்தாலும் அசராமல் அதை எட்டிப்பிடிக்க நினைக்கும் மக்கள் இங்கே ஏராளம். அதனால் தான் இந்தியாவிலேயே தங்கத்தின் நுகர்வு தமிழகத்தில் அதிகமாக இருக்கிறது.
இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. சர்வதேச அளவில் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு வீழ்வதாலும், இந்திய பங்கு சந்தைகள் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதாலும் தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வருவதாக கூறுகிறார்கள்.
கடந்த அக்டோபர் 4- ம்தேதி 10 கிராம் எடையுள்ள 22 காரட் ஆபரணத்தங்கம், 29 ஆயிரத்து 760 க்கு விற்றது . இதே 10 கிராம் எடையுள்ள ,22 காரட் ஆபரணத்தங்கம் அக்டோபர் 13 ம்தேதி 30 ஆயிரத்து 250 க்கு விற்பனையானது.
இந்த நிலையில் தங்கத்தின் விலை அடுத்து வரும் நாட்களில் எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு நகைக்கடை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சலானி, நியூஸ் ஜெ தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.ஏற்கனவே தங்கம் வாங்கியவர்களுக்கு லாபம் என்று கூறிய அவர், தங்கத்தின் விலை தொடர்ந்து உயர வாய்ப்பிருப்பதாக கூறினார்.
ஒரு சவரன் ஆபரணத்தங்கம் விரைவில் 26 ஆயிரத்தை தொடும் என்றும் சலானி தெரிவித்துள்ளார்.