சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பஞ்சாப் நேஷனல் வங்கியில், கவரிங் நகைகளுக்கு, தங்க நகை சான்றிதழ் வழங்கி பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்படுத்திய நகை மதிப்பீட்டாளரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
காரைக்குடி பஞ்சாப் நேஷனல் வங்கியில், சுமார் 20 வருடங்களாக ராமமூர்த்தி என்பவர், நகை மதிப்பீட்டாளர் பணி செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் அடகு வைக்கப்பட்ட நகைகளை, மறுமதிப்பீடு செய்த அவர், சுமார் 2 ஆயிரம் கிராம் மதிப்பிலான கவரிங் நகைகளை தங்க நகைகள் என்று சான்றிதழ் வழங்கினார். இந்த முறைகேட்டின் மூலம் பெற்ற பணத்தை, தனது மகன் ரத்தினகுமாரிடம் கொடுத்துள்ளார். இதனால் வங்கிக்கு பல லட்ச ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக கூறி, வங்கி மேலாளர் குறிஞ்சிநாதன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் ராமமூர்த்தியைக் கைது செய்துள்ள காவல்துறையினர், தலைமறைவாகியுள்ள அவரது மகனைத் தேடி வருகின்றனர்.