நாமக்கல் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணையை, மதுரை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் மாணவர் கோகுல்ராஜ், வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்த நிலையில், இருவரும் கோயிலுக்கு சென்றபோது 2015 ஜூன் 23-ஆம் தேதி மாயமானார். இந்நிலையில், கிழக்கு தொட்டிப்பாளையம் ரயில் பாதை அருகே கோகுல்ராஜ் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் யுவராஜ் உள்பட 17 பேர் மீது நாமக்கல் சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு நாமக்கல் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளநிலையில், வழக்கு விசாரணையை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி கோகுல்ராஜின் தாய் சித்ரா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டார். 4 மாதத்தில் விசாரணையை முடிக்கவும் ஆணையிட்டுள்ளார்.