"கோதாவரி – காவிரி இணைப்புத் திட்டம் நிச்சயம் நிறைவேறும்"

கோதாவரி – காவிரி இணைப்பு திட்டம் மத்திய அரசின் உதவியுடன் நிச்சயம் நிறைவேறும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக பிரமாண்ட பொதுக்கூட்டம், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடைபெற்றது. பிரசார கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஒரே மேடையில் வாக்கு சேகரித்தனர். கூட்டத்தில் உரையாற்றிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுதந்திரத்திற்கு பிறகு பல ஆண்டுகளாக ஆண்ட காங்கிரஸ் கட்சி, நாட்டை சீரழித்து விட்டதாக தெரிவித்தார். காங்கிரஸ் ஆட்சியில் ஒரு மருத்துவ கல்லூரிக்கு அனுமதி பெற படாதபாடு பட்டதாக கூறிய துணை முதலமைச்சர், ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிக்களுக்கு பாஜக அரசு அனுமதி வழங்கியதாக தெரிவித்தார்.

பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தின் மீது பேரன்பு கொண்டவராக பிரதமர் மோடி திகழ்வதாக குறிப்பிட்டார். மத்திய மற்றும் மாநில அரசுகள் இடையே இணக்கமான உறவு இருந்தால் மட்டுமே, மாநிலம் பல்வேறு துறைகளில் வளர்ச்சி பெறும் எனத் தெரிவித்தார். கோதாவரி – காவிரி இணைப்பு திட்டம் நிறைவேறும் போது, தமிழ்நாடு வளர்ச்சி அடையும் என குறிப்பிட்ட முதலமைச்சர், திட்டத்தை நிறைவேற்ற அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் எனத் தெரிவித்தார்.

மத்திய அரசு வழங்கிய ஆலோசனையின்படி, தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கையால், கொரோனா பரவல் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டதாக கூறிய முதலமைச்சர், இந்தியாவிலேயே அதிகளவில் RT – PCR பரிசோதனை செய்த ஒரே மாநிலம் தமிழ்நாடு எனத் தெரிவித்தார். கொரோனா பேரிடர் காலங்களில் ஏழை எளிய மக்களுக்கு, விலையில்லா அத்தியாவசிய பொருட்கள் மற்றும் ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கிய ஒரே, தமிழ்நாடு அரசு எனத் தெரிவித்தார். 

முன்னதாக பொதுக்கூட்டத்தில் பேசிய உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் தாய்மார்களின் வாக்கு திமுகவிற்கு கிடைக்காது எனத் தெரிவித்தார். தமிழகத்திற்கு துரோகத்தை மட்டும் அளித்த திமுக – காங்கிரஸ் கூட்டணி, இந்த தேர்தலோடு காணாமல் போகும் எனக் குறிப்பிட்டார். 

பல்லாயிரக்கணக்கானோர் மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க வந்த பிரதமர் மோடிக்கு வேல் பரிசாக வழங்கப்பட்டது.

Exit mobile version