தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து தற்போது, ஒரு சவரன் ஆபரண தங்கம் 29 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இது அடுத்த சில தினங்களில் 30 ஆயிரத்தை தொடும் என்கின்றனர் பொருளாதார வள்ளுநர்கள். இது குறித்த செய்தி தொகுப்பு
பெண்கள் மற்றும் ஆண்களின் அணிகலனாக மட்டுமின்றி, தனி மனித கெளரவத்தின் அடையாளமாக தங்கம் பார்க்கப்படுகிறது. பொருளாதார பற்றாக்குறை காலங்களில், உடனடியாக பணமாக மாற்றக்கூடிய ஒரு மூலதனமாக தங்கம் உள்ளதால், மக்களுக்கு அதன் மீதான நாட்டம் அதிகமாக உள்ளது.
2008ம் ஆண்டில், உலகையே உலுக்கிய சர்வதேச பொருளாதார மந்த நிலைமையில் சிக்கித் தவித்த பல நாடுகள், அதிலிருந்து பல பாடங்களை கற்றுக்கொண்டன. 2010 ஆம் ஆண்டுக்கு பிறகு, தங்கள் தங்க கையிருப்பை சர்வதேச சந்தையில் விற்பனை செய்வதை நிறுத்தி, படிப்படியாக அந்த உலோக கையிருப்பை அதிகப்படுத்த ஆரம்பித்தன. அதன் விளைவாக தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் படிப்படியாக உயர ஆரம்பித்து, 2011-12 ஆம் ஆண்டுகளில், ஒரு அவுன்ஸ், அதாவது, 31 கிராம் தங்கம், 94 ஆயிரத்து 450 என்ற உச்ச நிலையை தொட்டது. அதற்குப் பிறகு நிகழ்ந்த பொருளாதார முன்னேற்றங்களால், 2016ம் ஆண்டு வரை இறங்குமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை, தற்போது படிப்படியாக உயர ஆரம்பித்துள்ளது.
இந்தியாவை பொருத்தவரை, ஓர் ஆண்டின் மொத்த தங்க உற்பத்தியின் அளவு, 14 டன்கள் மட்டுமே. ஆனால், இந்தியர்களின் தங்க பசிக்காக, சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள, 800 டன் தங்கம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. தங்கத்தின் தேவைக்கு, இறக்குமதியை சார்ந்திருப்பதால், சர்வதேச சந்தை விலை தாக்கங்கள், இந்திய தங்க சந்தையில் முழுவதும் உணரப்படுகின்றன.
நிதி ஆயோக் அறிக்கையில் தெரிவித்துள்ளபடி, உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில், தங்கம் பூமிக்கடியில் இருப்பதாகவும், அங்கெல்லாம் சுரங்கம் அமைத்து, உள்நாட்டிலேயே தங்கத்தின் உற்பத்தியை அதிகரிப்பது அவசியமாகியுள்ளது. இன்றைய காலக்கட்டத்தில், அடுத்த சில தினங்களில், ஒரு சவரன் தங்கம், 30 ஆயிரம் ரூபாயை தொடும் என்கிறார், தங்க நகை வியாபாரி அனந்தபத்மநாபன்.
சர்வதேச நிகழ்வுகளால், விலையில் எதிர்பாராத பெரும் ஏற்ற இறக்கங்களை சந்திக்கும் தங்கத்தில் முதலீடு செய்வதற்கு முன்பு, அந்த முதலீட்டைப் பாதுகாக்க, பல முறை யோசிக்க வேண்டியது அவசியம். இதை, சிறு முதலீட்டாளர்களும், குடும்ப தலைவர்களும் மனதில் கொள்ள வேண்டும்.