பாலைவனப் பகுதியான துபாயின் தண்ணீர் பிரச்னையைப் போக்க அந்நாட்டு தேசிய அலோசனை குழு பனிப்பாறை திட்டம் ஒன்றினை மேற்கொண்டு வருகிறது, பனிப்பாறை திட்டம் என்றால் என்ன?, அதனை எவ்வாறு செயல்படுத்துகிறார்கள்?
மேகங்களைத் துளையிடும் வானளாவிய கட்டடங்கள் நிறைந்துள்ள பாலைவனம்தான் துபாய். தொடர்ந்து விரிவடைந்துவரும் துபாயின் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது தண்ணீர்த் தட்டுப்பாடு. பாலைவனத்தில் அமைந்துள்ள துபாயில், மழைப் பொழிவுக்கான சாத்தியங்கள் மிகக் குறைவு என்பதால், தண்ணீர்ப் பற்றாக்குறைக்கு முடிவுகட்டும் விதமாக, துபாயின் தேசிய அலோசனை குழுவின் தலைவர் புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த உள்ளார்.
இந்தத் திட்டத்தின்படி, பாலைவனப் பகுதியான துபாயின் தண்ணீர் பிரச்னையைப் பனிப்பாறைகள் தீர்க்க உள்ளன. ஆம் மாபெரும் பனிப் பாறைகளைக் கடல் வழியாகத் துபாய்க்குக் கொண்டு வந்து அவற்றின் மூலம் தண்ணீரைப் பெறுவதுதான் பனிப்பாறை திட்டம் ஆகும். இதற்காக
உலக வெப்ப மயமாதலால் அண்டார்க்டிகாவில் இருந்து பிரியும் பனிப்பாறைகளைப் பயன்படுத்திக் கொள்ள ஐக்கிய அரபு அமீரகம் செயல்திட்டம் வகுத்து உள்ளது. மிகவும் சுத்தமான தண்ணீரை இந்த பனிப்பாறைகள் கொண்டுள்ளன – என்பதால் துபாய்க்கு இதன் மூலம் நிறைய குடிநீர் கிடைக்கும்.
ஆஸ்திரேலிய பகுதிக்குட்பட்ட ஹியர்ட் தீவில் தற்போது பனிப்பாறைகள் நிலைகொண்டுள்ளன. திட்டத்தின் ஒரு பகுதியை முதலில் அங்கிருந்து தொடங்க போவதாக துபாய் தேசிய அலோசனை குழுவின் தலைமை நிர்வாக அதிகாரி அப்துல்லா அல்ஷேஹி அறிவித்துள்ளார், மேலும் ஆரம்பத்தில் சிறிய பனிப்பாறைகளைக் கொண்டு வருவதன் மூலம் இந்த திட்டத்தின் செயல்முறைகளையும், குறைபாடுகளையும் கண்டறிய முடியும் என்று அவர் கூறி உள்ளார்.
கப்பல்களின் மேல் இந்த பனிப்பாறைகளை ஏற்றாமல், கடல் வழியாக மிதக்க வைத்து நகர்த்துவதுதான் இந்த திட்டத்தின் முக்கிய நுட்பமாகும். இந்த சோதனை வெற்றி பெற்றால், ஆஸ்திரேலியா மட்டுமின்றி, பின்னர் தென்னாப்பிரிக்கா வழியாகவும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பனிப்பாறைகளை கொண்டு வர முடியும்.
ஆனால் இந்த திட்டத்தின்போது, கொண்டு வரும் வழியிலேயே பனிப்பாறையானது 30% வரை உருகிவிடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த பனிப்பாறைகள் 300 முதல் 500 மில்லியன் கியூபிக் கேலன்கள் அளவிற்கு தண்ணீரை கொண்டுள்ளதால், இழப்பீடு தவிர்த்து மற்றவற்றைக் கொண்டு வந்தாலே அது பெரிய வெற்றிதான் – என்கிறார் அப்துல்லா.
இந்த பனிப்பாறைகள் அண்டார்டிகாவின் பாதுகாக்கப்பட்ட மண்டலத்திலிருந்து தொலைதூரத்தில் இருக்கின்றன. சர்வதேச கடற்பரப்பு சட்ட நெறிமுறைகளின் அடிப்படையில் இவற்றை தனிப்பட்ட முறையில் யார் வேண்டுமானாலும் கைப்பற்றி நீர் ஆதாரமாக பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த வகையில் பனிப்பாறைகள் மூலம் கிடைக்கும் தண்ணீரால் துபாய் பாலைவனத்தைப் பசுமையாக மாற்ற முடியும் என்று நம்பப்படுகின்றது.