காதலன் வெளிநாடு செல்வதற்காகக் கடத்தல் நாடகமாடிய காதலி

காதலன் வெளிநாடு செல்வதற்காகக் கடத்தல் நாடகமாடிய காதலியைக் காவல்துறையினர் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரியைச் சேர்ந்த வித்யா சென்னையில் தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வருகிறார். தனது சகோதரனுடன் சென்னையில் தங்கிப் பணியாற்றி வந்த வித்யா தனது நண்பரின் திருமணத்திற்காகக் காரைக்கால் சென்று திரும்பும் போது சகோதரனுக்குத் தகவல் கொடுத்துள்ளார். இந்த நிலையில் வித்யாவின் தந்தையையும், சகோதரனையும் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் வித்யாவைக் கடத்தி வைத்திருப்பதாகவும் அவரை விடுவிக்க 10 லட்ச ரூபாய் தர வேண்டும் எனக் கேட்டும் மிரட்டியுள்ளனர். புகாரின் பேரில் காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை செய்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. வித்யா கடந்த 2 ஆண்டுகளாகக் காரைக்காலைச் சேர்ந்த சுரேஷ்பாபுவைக் காதலித்து வந்துள்ளார். சுரேஷ்பாபு வெளிநாடு செல்வதற்கான பணத்தை ஏற்பாடு செய்யவே இருவரும் சேர்ந்து இந்தக் கடத்தல் நாடகத்தை அரங்கேற்றியது விசாரணையில் தெரியவந்தது. இருவரையும் கைது செய்த காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version