ஃபானி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தலைமை செயலாளர் அறிவுரைகள்

ஃபானி புயல் எச்சரிக்கையை அடுத்து, மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.

சென்னை தலைமைச்செயலகத்தில் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால், வருவாய் துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் அவசர ஆலோசனை மேற்கொண்டனர். ஆலோசனையில், டிஜிபி டி.கே. ராஜேந்திரன், தீயணைப்புத்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். மேலும், காணொலி காட்சி மூலமாக, மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதில் பல்வேறு அறிவுரைகளை தலைமைச் செயலாளர் வழங்கினார்.

 

அதன்படி, இந்திய வானிலை மையம் வெளியிடும் முன்னெச்சரிக்கை தகவல்களை அனைத்து கடலோர மாவட்ட நிர்வாகங்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என்றும், கடலோர மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள அவசர கட்டுப்பாட்டு மையங்களில் கூடுதல் பணியாளர்களை நியமித்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிவாரண முகாம்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும், தாழ்வான பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தக்க சமயத்தில் அறிவுறுத்த வேண்டும் எனவும், அத்தியவாசிய பொருட்களான அரிசி, மண்ணெண்ணெய் போதிய இருப்பு வைத்திருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

குடிநீர் தங்குதடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பேரிடர் மீட்பு குழுக்களை புயல் தாக்கக்கூடிய பகுதிகளில் முன்கூட்டியே நிறுத்தி வைக்க வேண்டும், கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப ஏற்பாடு செய்ய வேண்டும், மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த போதிய படகுகள் நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புயல் கரையை கடக்கும் போது பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் வினியோகம் நிறுத்தப்பட வேண்டும், மருத்துவ முகாம்கள் மற்றும் நடமாடும் மருத்துவ முகாம்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வலியுத்தியுள்ளார்.

Exit mobile version