2கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ராட்சத பறவையின் படிமங்கள் நியூஸிலாந்தில் கண்டெடுப்பு

உலகின் பல்வேறு சூழல்களில் நிலவும், காலநிலை மற்றும் சுற்றுச் சூழல் மாறுபாடுகள் காரணமாக, சில குறிப்பிட்ட பகுதிகளில் வாழ்ந்த, சில உயிரினங்கள் பிரமாண்ட வளர்ச்சியைப் பெற்று உள்ளன. இந்த உயிரினங்களில் பல, இன்றைக்கு இல்லை என்றாலும், அவற்றின் புதைபடிமங்கள் அவ்வப்போது கிடைத்து, நம்மை ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கி வருகின்றன.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த பேராசிரியரும், புதைபடிவ நிபுணருமான ட்ரெவர் வொர்த்தி என்பவர், நியூசிலாந்து நாட்டின் ஒட்டாகோ பகுதியில், புதைபடிவ ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த 2008ஆம் ஆண்டில் அங்கு சுமார் 2 கோடி, ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு ராட்சத பறவையின் புதை படிமங்களைக் கண்டறிந்தார்.

முதலில் அது கழுகாக இருக்கும் என்று கருதப்பட்ட நிலையில், கடந்த 11ஆண்டுகால ஆய்வில் அது ஒரு ராட்சத கிளி என்று, கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதுவரை உலகில் வாழ்ந்த கிளிகளில் எல்லாம் மிகப் பெரிய கிளி என்ற பெருமையும் அதற்குக் கிடைத்து உள்ளது.

மூன்றரை அடி உயரம் கொண்ட, அந்த ராட்சத கிளி 7 கிலோ அல்லது அதற்கும் மேல் எடை கொண்டிருக்கலாம், என்று கருதப்படுகிறது. இப்போதுள்ள கிளிகளில் எல்லாம் பெரியதான காகாபோவின், உயரத்தைப் போல இது 2 மடங்கு, அதிக உயரத்தைக் கொண்டது.

ஆய்வில் கிடைத்த புதை படிமங்களைக் கொண்டு கணினி வரைகலையின் உதவியோடு, ‘ராட்சத கிளி எப்படி இருந்திருக்கும்?’ – என்ற கற்பனைப் படத்தை ஆய்வாளர்கள் கடந்த புதன் கிழமை வெளியிட்டனர். ஹெராக்கிள்ஸ் இன்ஸ்பெக்டேடஸ், என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கிளி, தனது வலிமை மற்றும் பெரிய தோற்றம் காரணமாக ‘உலகை சுமப்பவன்’ – என்று கிரேக்க புராணங்களில் கூறப்படும் ஹெர்குலஸ்சின் பெயரால் ‘ஹெர்குலஸ் கிளி’ என்றும் அழைக்கப்படுகிறது.

ஹெராக்கிள்ஸ் இன்ஸ்பெக்டேடஸ் கிளியின், பிரமாண்ட வடிவத்திற்கு அது அதிக அளவில், அதிக சத்தான உணவுகளை, உட்கொண்டது காரணமாக இருக்கலாம் என்றும், இந்தக் கிளி சக பறவைகளைக் கூட, கொன்று உண்டிருக்கலாம் என்றும் பேராசிரியர் ட்ரெவர் வொர்த்தி கருத்து தெரிவித்து உள்ளார். இந்தக் கிளியின் கண்டுபிடிப்பு உலகெங்கும் உள்ள மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

Exit mobile version