வருங்கால சந்ததியினர் ஆரோக்கியமாகவும் உடல் ஊனமின்றியும் வளர தடுப்பூசி திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்திர தனுஷ் என்ற பெயரில் செயல்படுத்தப்படும் இத்திட்டம் குறித்தும் தடுப்பூசி போட வேண்டியதன் அவசியம் குறித்தும் இந்த செய்தித் தொகுப்பு
சர்வதேச அளவில் தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துவதில் இந்தியா முன்னணியில் உள்ளது. இந்திய அரசின் தொடர் முயற்சியின் காரணமாக பெரியம்மையும் போலியோவும் இந்தியாவிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளன
இந்நிலையில் இரண்டு வயதுக்குக் கீழே உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கர்ப்பிணி பெண்களும் தடுப்பூசி போடும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி போடுவதால் ஹெப்படைடிஸ் பி, காசநோய், டிப்தீரியா போன்ற முக்கியமான எட்டு நோய்கள் வரமால் தடுக்க முடியும்
இதுபோன்ற நோய்கள் குழந்தைகளின் உடல் நலத்திற்கும் வாழ்க்கைக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கின்றன. குறிப்பாக, ஹெப்படைடிஸ் பி-யும், காசநோயும் ஏற்படுத்தும் பாதிப்புகள் அதிகம் என்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் வசந்தி.
உலகில் காசநோயால் பாதித்தவர்களில் நான்கில் ஒருவர் இந்தியாவில் இருக்கிறார்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனம். அதேபோல் உலகிலேயே மிக அதிகமான அளவு பிரசவங்கள் நடக்கும்
நாடும் இந்தியாதான். பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 2 வயதுக்குள் எட்டு வகையான நோய் பாதிப்புகளிலிருந்து காப்பாற்ற தடுப்பூசி கட்டாயம் என்கிறார் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவுகள் மருத்துவர் சந்திரகுமார்.
முறையாக தடுப்பூசி போடுவதால் சிசு மரணங்களில் இருந்தும், உடல் ஊனத்தில் இருந்தும் குழந்தைகளை பாதுகாக்க முடியும். ஆரோக்கியமான குழந்தைகளே நாட்டின் வளமான எதிர்காலத்திற்கு ஆதரமாக உள்ளனர். எனவே குழந்தைகளுக்கு தவறாமல் தடுப்பூசி போட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.