நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட புதிய தேதி பெற்றுக்கொள்ளலாம் – உச்சநீதிமன்றம்

நிர்பயா கொலை குற்றவாளிகளை தூக்கிலிட புதிய தேதியை விசாரணை நீதிமன்றத்தை அணுகி பெற்றுக்கொள்ளலாம் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா வழக்கில் முகேஷ்குமார் சிங், பவன்குமார் குப்தா, வினய்குமார் சர்மா, அக் ஷய்குமார் சிங் ஆகிய 4 குற்றவாளிகளுக்கும் டெல்லி விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.

 டெல்லி நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்த நிலையில், குற்றவாளிகள் தரப்பில் கருணை மனு, மறுஆய்வு மனு, மற்றும் சீராய்வு மனுக்கள் மாறி, மாறி தாக்கல் செய்யப்பட்டதால் தண்டனையை நிறைவேற்றுவது 2 முறை தள்ளிப்போனது. இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசும், சிறைத்துறையும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.

மத்திய அரசின் மேல்முறையீட்டு மனுவை கடந்த 7-ந் தேதி விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் கொண்ட அமர்வு, குற்றவாளிகளுக்கு தங்களின் சட்டரீதியான உரிமைகளை பயன்படுத்திக்கொள்ள ஒரு வாரகால அவகாசம் வழங்கி இருப்பதால் வழக்கை ஒத்திவைத்தனர்.

இந்த மனுக்கள் மீண்டும் விசாரணைக்கு வந்த போது,  மத்திய அரசு தரப்பில் ஆஜரான துஷார் மேத்தா, டெல்லி நீதிமன்றம் கடந்த 5-ந் தேதி வழங்கிய தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். மேலும், குற்றவாளிகளில் ஒருவரான பவன்குமார் குப்தா இன்னும் ஜனாதிபதியிடம் கருணை மனு தாக்கல் செய்யவில்லை என்றும், மீதமுள்ள 3 குற்றவாளிகளின் கருணை மனுக்கள் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

இதையடுத்து, 4 குற்றவாளிகளையும் தூக்கில் போடுவதற்கான புதிய தேதியை மத்திய அரசு விசாரணை நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறிய நீதிபதிகள், வழக்கை நாளைக்கு ஒத்தி வைத்தனர்.

Exit mobile version