கொரோனா வைரஸ் விவகாரத்தில் ஜெர்மனியும் தொடக்கத்தில் சற்று அலட்சியமாகத்தான் இருந்தது. ஆனால் கொரோனா பரவலின் வேகம் அதிகமான போது ஜெர்மனி யாரும் எதிர்பாராத விதமாக கொரோனாவை எதிர்த்து தாக்குப்பிடிக்கத் தொடங்கியது. உதாரணமாக கடந்த வாரம் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் ஜெர்மனி 5ஆவது இடத்தைப் பெற்றாலும், கொரோனா உயிரிழப்புகளில் ஜெர்மனி 10ஆவது இடத்தில்தான் இருந்தது. இத்தனைக்கும் ஜெர்மனியில் கொரோனா பரவல் முதன்முதலாகக் கண்டறியப்பட்ட பவேரியா மாகாணத்தைத் தவிர வேறு எங்கும் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை!. இதனால் உலக நாடுகள் ஜெர்மனியை ஆச்சர்யத்தோடு பார்க்கத் தொடங்கி உள்ளன. கொரோனா வராமல் காப்பது எப்படி? என்பதில் ரஷ்யா உலகுக்கு வழிகாட்டுகின்றது என்றால், கொரோனா வந்த பின்னும் அதற்கு எதிராக எப்படிப் போராடி வெல்வது என்பதில் ஜெர்மனி உலகுக்கு வழிகாட்டுகின்றது. எப்படி சாதித்தது ஜெர்மனி? என்பது பற்றி பார்ப்போம்…
ஊரடங்கு போடப்பட்ட நாடுகளில் கூட 5 பேர் வரை ஓரிடத்தில் கூட முடியும். ஆனால், ஜெர்மனியில் 2 பேருக்கும் மேல் கூடக் கூடாது என்ற அரசின் உத்தரவை மக்கள் அப்படியே பின்பற்றுகின்றனர். பொது நிகழ்ச்சிகள், விழாக்கள் ஆகியவையும் கால்வரையின்றி தள்ளி வைக்கப்பட்டு உள்ளன. பொது மக்களின் இந்த ஒழுங்கு ஜெர்மனியில் கொரோனாவின் ஆதிக்கத்தை வெகுவாகக் குறைத்து உள்ளது. ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட இத்தாலியில், 25% குடிமக்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். இதனால்தான் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கையில் சீனாவின் தொகையில் பாதியைத் தொட்டபோதே, இறப்பு எண்ணிக்கையில் இத்தாலி சீனாவை முந்தியது. ஆனால் ஜெர்மனி ஐரோப்பா கண்டத்தில் அதிக சதவிகிதம் இளைஞர்களைக் கொண்ட நாடாக உள்ளது. இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சராசரி வயது 63ஆக உள்ளபோது, ஜெர்மனியில் அது 47ஆக உள்ளது. இந்த வயது வித்தியாசம்தான் கொரோனாவை தாக்குப்பிடிக்கும் ஆற்றலை ஜெர்மனிக்குக் கொடுத்து உள்ளது
உலகிலேயே தனிநபர் சுகாதாரத்திற்கு அதிகம் செலவு செய்யும் நாடாக ஜெர்மனி உள்ளது. ஜெர்மனி அரசாங்கம் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆண்டுக்கு 5,182 டாலர்களை, அதாவது இந்திய மதிப்பில் சுமார் 4 லட்சம் ரூபாய்களை சுகாதாரத்திற்காக ஒதுக்குகின்றது. இதனால் ஜெர்மானியர்கள் சுகாதாரம் மிக்கவர்களாகவும், சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு மிக்கவர்களாகவும் உள்ளனர்.மற்ற எந்த ஐரோப்பிய நாட்டை விடவும் ஜெர்மனியில் மருத்துவ உட்கட்டமைப்புகள் பலமாக உள்ளன. கொரோனா பரவத் தொடங்கிய ஜனவரி மாதமே அங்கு 25,000 மருத்துவ அறைகள் தனிமைப்படுத்துதலுக்காக தயார் செய்யப்பட்டன. மருத்துவ சோதனை நிலையங்களும் ஜெர்மனியில் அதிகமாக உள்ளன. பிற எந்த ஐரோப்பிய நாடும் 1 லட்சம் மக்களைக் கூட கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தாத நிலையில், ஜெர்மனியில் 2 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை சாத்தியமானது இதனால் தான். இப்போது தினமும் 12,000 பேர்களுக்கு ஜெர்மனியில் கொரோனா பரிசோதனைகள் நடக்கின்றன.
சாலையில் காரில் செல்லும் நபர்களுக்கு கொரோனா அறிகுறி இருந்தால், காரில் வைத்தே 5 நிமிடத்தில் சோதனை செய்து, சோதனையின் முடிவை 24 மணிநேரத்திற்குள் அறிவிக்கும் ஒரே நாடாக ஜெர்மனி உள்ளது. மேலும், கொரோனா தொற்று அல்லாமல், சாதாரண ஜூரம், புளூ காய்ச்சல் ஆகியவற்றுக்காக மருத்துவர்களை நாடும் மக்களின் விவரங்கள் கூட ஜெர்மானிய சுகாதாரத்துறையிடம் உள்ளன. இதைக் கொண்டு அவர்கள்
கொரோனா பரவாமல் இருக்கப் போராடுகிறார்கள். உலக நாடுகள் தங்கள் பட்ஜெட்டில் பெரும் பகுதியை இராணுவத்துக்கே ஒதுக்கி வரும் நிலையில், இராணுவம் போலவே பொது சுகாதாரத்திற்கும் அதிக நிதி ஒதுக்கீடு அவசியம் என்று சொன்ன நாடு ஜெர்மனி. அதன் பலன்கள்தான் தற்போது ஜெர்மனியை கொரோனாவில் இருந்து காக்கின்றன.