உங்கள் தொகுதி உங்கள் வேட்பாளர்… கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளர் P.R.G.அருண்குமார்

கோவை மாவட்டத்தின் பெரிய தொகுதியான கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதி, நகரப் பகுதியை மையமாகக் கொண்டது. தொகுதி மறுசீரமைப்பின் போது உருவான இந்த தொகுதி 2011-ல் கோவை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட கவுண்டம்பாளையம், தூடியலூர், காளப்பட்டி, புறநகர் பகுதியான பெரியநாயக்கன்பாளையம் ஊரட்சி ஒன்றியம் ஆகியவற்றை உள்ளடக்கியது. இத்தொகுதியின் முக்கிய தொழிலாக விவசாயம் காணப்படும் அதேநேரத்தில், செங்கல் உற்பத்தி, குறுந்தொழில் நிறுவனங்கள் வேலை வாய்ப்புக்கு உத்தரவாதம் அளித்து வருகின்றன. சர்வதேச விமான நிலையம், மருதமலை முருகன் கோயில், அனுவாவி சுப்பிரமணியர் கோயில் ஆகியவை கவுணடம்பாளையம் தொகுதியின் குறிப்பிடத்தக்க இடங்கள் ஆகும்.

கவுண்டம்பாளையம் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை, 4 லட்சத்து 61 ஆயிரம் என கணக்கிடப்பட்டுள்ளது. அதன்படி ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 29 ஆயிரத்து 997 ஆகவும், பெண் வாக்களர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 30 ஆயிரத்து 908 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்கள் எண்ணிக்கை 95 ஆகவும் காணப்படுகிறது.

கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில், அதிமுக வேட்பாளராக களமிறக்கப்பட்ட ஆறுக்குட்டி ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 58 வாக்குகள் பெற்று, அபார வெற்றி பெற்றார். அவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சுப்பிரமணியனை 69 ஆயிரத்து 260 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். சுப்பிரமணியன் 67 ஆயிரத்து 798 வாக்குகள் பெற்றிருந்தார்.

அதனையடுத்து நடைபெற்ற 2016 சட்டமன்றத் தேர்தலில், அதிமுக வேட்பாளராக மீண்டும் போட்டியிட்ட ஆறுக்குட்டி, ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 870 வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடினார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் பையா என்ற கிருஷ்ணன், ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 845 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

இந்நிலையில், வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி வேட்பாளராக, கோவை புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் களமிறக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட திமுக சார்பில், பையா என்ற கிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், மக்கள் நீதி மய்யம் சார்பில் சுரபி பங்கஜ் ராஜ், நாம் தமிழர் சார்பில் கலாமணி ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அடுத்த நொடி முதல், வாக்கு சேகரிப்பில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளார் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார். அந்த பரபரப்புக்கு இடையே அவர், நமது நியூஸ் ஜெ தொலைக்காட்சியின், உங்கள் தொகுதி உங்கள் வேட்பாளர் நிகழ்ச்சிக்கு அளித்த சிறுபேட்டி இதோ…

கடந்த முறை கோவை வடக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக, தான் செய்த சாதனைகளை விவரித்த அவர், அதனால் கவுண்டம்பாளையம் தொகுதி மக்களிடையே தனக்கு நல்ல ஆதரவு இருப்பதாக தெரிவித்தார்.

வரும் தேர்தலில் வெற்றி பெற்று கவுண்டம்பாளையம் தொகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளையும், கோரிக்கைகளையும் முழுமையாக நிறைவேற்றுவேன் என உறுதி கூறிய அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார், வாக்கு சேகரிக்க செல்லும் இடமெல்லாம் பொதுமக்கள் ஆதரவு சிறப்பாக உள்ளதாக தெரிவித்தார்.

யார் சென்றாலும் உதவிகள் செய்துகொடுக்கும் சிறந்த மனிதராக அதிமுக வேட்பாளர் அருண்குமார் விளங்குவதாகவும், அவரது வெற்றிக்கு பாஜக எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்றும், கவுண்டம்பாளையம் தொகுதி பாஜகவினர் தெரிவிக்கின்றனர்.

வரும் தேர்தலில் திமுக வெற்றி பெற்றால், மீண்டும் அராஜகம், கட்டபஞ்சாயத்து போன்றவை தலை தூக்கிவிடக் கூடும் என அச்சம் தெரிவிக்கும் கவுண்டம்பாளையம் தொகுதி மக்கள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான
அதிமுக ஆட்சியே மீண்டும் மலர வேண்டும் என்றும் விருப்பம் தெரிவிக்கின்றனர். மேலும், அதிமுகவின் வெற்றி கோட்டையான கவுண்டம்பாளையம் தொகுதியில், பி.ஆர்.ஜி.அருண்குமார் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டதுமே, அவரது வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும், அவர்கள் உற்சாகமாக நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Exit mobile version