ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் ஊர்வலம் சிறப்பான முறையில் நடைபெற்றது.
கோபிசெட்டிபாளையத்தில் விநாயகர்சதுர்த்தி விழாவையொட்டி பொதுமக்கள் சார்பில் மொடச்சூர், குட்டைமேடு, தேர்வீதி, சந்தைமேடு, அண்ணாநகர், செங்கோட்டையன்காலனி, திருவிக வீதி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்தது. பிரதிஷ்டை செய்து வைக்கபட்ட விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் விநாயகர் சிலைக்கு சக்கரை பொங்கல் வைக்கபட்டு கொழுக்கட்டை, சுண்டல், இனிப்பு வகைகள் படைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தினர். அதைதொடர்ந்து மொடச்சூர் சந்தைமேடு பகுதியின் முக்கிய வீதிகள் வழியாக, விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்ற பக்தர்கள் பவானி ஆற்றில் சிலைகளை கரைத்தனர். இதேபோல் கோபிசெட்டிபாளையம் புறநகர் பகுதியில் இந்து முன்னணி சார்பில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் பிரதிஷ்டை செய்த விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து மாலையில் நகர்பகுதியில் செண்டை மேள தாளங்களுடன் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது. விநாயகர் சிலை ஊர்வலத்தை இந்துமுன்னணி மாநில நிர்வாகி காடேஸ்வரா சுப்பிரமணியம் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். அதைதொடர்ந்து சீதாகல்யாண மண்டபம் முதல் புதுப்பாளையம், பேருந்து நிலையம், தினசரி சந்தை, கச்சேரி மேடு, கள்ளிப்பட்டி, உள்ளிட்ட கோபி நகரின் முக்கிய சாலைகளின் வழியாக விநாயகர் சிலைகளை எடுத்து சென்று பவானி ஆற்றில் கரைத்தனர்.