இரு கைகள் மற்றும் கால்களை இழந்த மாற்றுத் திறனாளிகளுக்கு மோட்டார் வாகனங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். விளையாட்டு விடுதி கட்டடங்கள், வேலூர் மத்திய சிறை வளாகத்தில் உள்ள பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையங்கள், தொழிலாளர் அலுவலக் கட்டடங்களையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் தருமபுரி, விழுப்புரம், நாமக்கல் மாவட்டங்களில் 3 கோடியே 43 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விளையாட்டு விடுதிக் கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் மேலக்கோட்டையூரில் 7 கோடியே 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆய்வுக்கூடம், கூடுதல் வகுப்பறைகள், கூடுதல் விடுதி கட்டடங்களையும் அவர் திறந்து வைத்தார். இந்திய அளவிலும், பன்னாட்டு அளவிலும் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் பங்கு பெறுவதற்கு, அவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கும் வகையில் தமிழக அரசு இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இரண்டு கைகள் மற்றும் கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட நகரும் வண்டிகள் வழங்கும் பணியை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். தசைச்சிதைவு, பக்கவாதம் காரணமாக முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட கை, கால்கள் பாதிக்கப்பட்ட மாற்று திறனாளிகளுக்கு 6 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மோட்டார் வாகனங்களை அவர் வழங்கினார். இந்த மோட்டார் வாகனங்கள் 120 கிலோ எடையைத் தாங்கும் வகையிலும், ஒரு முறை பேட்டரி சார்ஜ் செய்தால், 20 கிலோ மீட்டர் வரை செல்லும் அளவிற்கு உருவாக்கப்பட்டுள்ளது.
வேலூர் மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்தார். இதேபோல், கோயம்புத்தூர்,பாளையங்கோட்டை, புதுக்கோட்டையில் உள்ள மத்திய சிறைச்சாலையில் அமைக்கப்பட்டுள்ள பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையங்களையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.
பெரம்பலூர், சேலம், விழுப்புரம், ஈரோடு, விருதுநகர், கரூர் ஆகிய மாவட்டங்களில் தொழிலாளர் அலுவலர் அலுவலக் கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார். 6 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இந்தக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
தொழிற் பயிற்சி நிலையங்கள் குறித்த தர வரிசைப் பட்டியலில் நாட்டிலேயே முதல் 5 இடங்களைப் பெற்ற திருச்செந்தூர், மதுரை, நாமக்கல், திருச்சி, உளுந்தூர்பேட்டை தொழிற்பயிற்சி நிலையங்களின் முதல்வர்களுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
சென்னை, கிண்டியில் உள்ள தமிழ்நாடு சிறு தொழில் நிறுவன அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாநில தொழில் நெறி வழிகாட்டு மையத்தை, முதலமைச்சர் திறந்து வைத்தார். 1 கோடியே 31 லட்சம் ரூபாய் செலவில் இந்த அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இதேபோல், 1 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள மெய் நிகர் கற்றல் வலைத்தளத்தை முதலமைச்ச்ர துவக்கி வைத்தார்.