கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய உள்ள அண்ணா பல்கலைக்கழக கடல்சார் மேலாண்மை துறையினர், பேரிடர் கால முன்னெச்சரிக்கை அறிக்கையை தயார் செய்ய உள்ளனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக கடல்சார் மேலாண்மை துறை இயக்குனர், பேராசிரியர் சீனிவாசலு தலைமையிலான குழுவினர் புயல் பாதித்த மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் ஆய்வு மேற்கொள்கின்றனர். முதற்கட்டமாக காரைக்கால் தொடங்கி நாகை மாவட்டம் முத்துப்பேட்டை வரையில் நடைபெற உள்ளது. ஆய்வின் போது கஜா புயலின் தாக்கத்தால் கடல்வாழ் தாவரங்கள், உயிரினங்கள் அடைந்த பாதிப்புகளை ஆய்வு செய்கின்றனர். இந்த ஆய்வின் மூலம் புயல் சமயத்தில் கடல்நீர் நிலத்திற்கு வந்த தொலைவை கணக்கெடுக்கின்றனர்.
முதற்கட்டமாக 15 நாட்களுக்கு நடைபெறும் இந்த ஆய்வு, தொடர்ந்து 6 மாத காலம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் புயல் மற்றும் ஆழிப்பேரலை நிகழ்ந்த காலங்களை கணக்கிட்டு எதிர்கால திட்டம் தயார் செய்யப்பட உள்ளது. ஆய்வுக்கு பின்னர் பேரிடர் தடுப்பு மற்றும் மேலாண்மை துறையிடம் ஆய்வறிக்கையை அண்ணா பல்கலைக்கழக கடல்சார் மேலாண்மை குழுவினர் சமர்பிக்க உள்ளனர்.