தமிழக அரசின் நிவாரண பொருட்கள் பொதுமக்களுக்கு கிடைக்க விடாமல் எதிர்கட்சிகள் பிரச்சனை செய்து வருவதாக பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கஜா புயலுக்கு முன்னெச்சரிக்கை கொடுத்ததோடு நின்றுவிடாமல், தொடர்ந்து கண்காணித்து, உடனடியாக மீட்புப் பணிகளையும் தொடங்கி, அதை தமிழக அரசு செயல்படுத்தியும் வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, திருவாரூர் மாவட்டத்தில் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, செல்லூர் ராஜூ, ஆர்.காமராஜ் ஆகியோர், முதற்கட்டமாக 1000 த்திற்கும் மேற்பட்டோருக்கு நிவாரண பொருட்களை வழங்கினர்.
இதனை தொடர்ந்து அதிக அளவில் பாதிக்கப்பட்ட திருத்துறைபூண்டி பகுதியில் நிவாரண பொருட்களை வழங்குவதற்காக செல்ல உள்ளனர். இதனை தடுப்பதற்காகவும், கஜா புயலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் அரசுக்கு ஏற்பட்டுள்ள நற்பெயரை கெடுக்கும் நோக்கிலும், பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், அகற்றப்பட்ட மரங்களை மீண்டும் சாலையில் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாதிக்கப்பட்ட மற்றும் போராட விரும்பாத மக்களை, அரசியல் நோக்கத்தோடு வலுக்கட்டாயமாக போராட்டத்தில் ஈடுபடுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் மூலம், அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் கிடைக்க வேண்டிய நிவாராண பொருட்கள், குடிநீர் உள்பட அத்தியாவசிய பொருட்கள், மக்களிடம் சென்று சேராமல் தடுக்கப்படுவதால், பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.