கஜா புயல் – தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? – சிறப்பு தொகுப்பு

கஜா புயல் பாதித்த மாவட்டங்களல் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு மேற்கொண்டு வரும் நிவாரணப் பணிகளின் பற்றின சிறப்பு தொகுப்பு…  

கஜா புயலால், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல் மற்றும் கடலூர் ஆகிய 6 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் உள்ளாட்சித் துறை பிற துறைகளுடன் இணைந்து கஜா புயல் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

மீட்பு பணிகள் துரிதமாக நடைபெறுவதை கண்காணிக்க, கடுமையாக பாதித்த நாகப்பட்டினம் மாவட்டத்தில் 6 பேர் கொண்ட அமைச்சர்கள், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளையும் நியமனம் செய்து அனைத்து துறைகளை உள்ளடக்கிய 14 குழுக்கள் அமைக்கப்பட்டு நிவாரணப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

985 ஜேசிபிகள், 2,125 மரம் அறுக்கும் கருவிகள், 1044 ஜெனரேட்டர்கள், 604 மின் மோட்டார்கள், 195 ஆயில் இன்ஜின்கள் ஈடுபடுத்தப்பட்டு மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

667 நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு இதுவரை 2.77 லட்சம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர், இவர்களுக்கு இதுவரை 6.93 லட்சம் உணவு பொட்டலங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

நாகை மாவட்டத்தில், 56 நிலையான மருத்துவ முகாம்களும், 206 நடமாடும் மருத்துவ முகாம்கள் ஆக மொத்தம் 262 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த முகாம்கள் மூலம், மொத்தம் 13,661 நபர்கள் பயனடைந்துள்ளனர். முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நபர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை உறுதி செய்ய 11 உணவு பாதுகாப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நாகை மாவட்டத்தில் புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட வேதாரண்யம், நாகப்பட்டினம், தலைஞாயிறு மற்றும் கீழையூர் வட்டாரங்களில் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.

கொசு ஒழிப்பு நடவடிக்கைகளில், சுகாதார ஆய்வாளர், இளநிலை பூச்சியாளர் உள்ளிட்ட 5 நபர்கள் கொண்ட 66 குழுக்கள் அமைக்கப்பட்டு, 432 கொசு ஒழிப்பு பணியாளர்களைக் கொண்டு தினமும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 168 கொசு ஒழிப்பு இயந்திரங்கள் மூலம் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொது மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்குவதை உறுதி செய்யும் வகையில், 69 குளோரின் பரிசோதனை குழுக்கள் அமைக்கப்பட்டு தரமான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

விருதுநகர், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி, சேலம், விழுப்புரம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலிருந்து 5 காவல் துறை கண்காணிப்பாளர்கள், 15 ஆய்வாளர்கள், 55 துணை ஆய்வாளர்கள், 717 காவலர்களும் மீட்பு பணியில் இரவு பகலாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

Exit mobile version