"கஜா" புயல் – உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் – முதலமைச்சர் அறிக்கை

கஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

புயல் பாதிப்பு குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கஜா புயல் மற்றும் கனமழை காரணமாக 45 பேர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனையை அளிப்பதாக தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

படுகாயம் அடைந்தவர்களுக்கு 1 லட்ச ரூபாயும் சாதாரண காயம் அடைந்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும் வழங்க ஆணையிட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். புயலுக்கு 102 மாடுகளும், 633 ஆடுகளும் உயிரிழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் பழனிசாமி, உயிரிழந்த மாடு ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாயும் ஆடு ஒன்றுக்கு 3 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும் வகையில், 493 முகாம்களில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 கிலோ அரிசி, வேட்டி, சேலை மற்றும் மண்ணெண்ணெய் இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். கஜா புயலால் சுமார் 90 ஆயிரம் குடிசை வீடுகளும், 30 ஆயிரத்து 328 ஓட்டு வீடுகளும் சேதமடைந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேதமடைந்த வீடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

புயல் காரணமாக தென்னை, நெல் மற்றும் இதர பயிர்கள் கடுமையான சேதத்திற்கு உள்ளாகி இருப்பதாக தெரிவித்துள்ள முதலமைச்சர், பயிர் பாதிப்பை கணக்கிட வருவாய் மற்றும் விவசாயத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். கணக்கீடு முறையில் உரிய நிவாரணம் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர்கள், காவல் உயர் அதிகாரிகள் முகாமிட்டு பணிகளை துரிதப்படுத்தப்படுத்தி வருவதாகவும் முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சுனில் பாலிவால், திருவாரூர் மாவட்டத்திற்கு அமுதா, நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூடுதலாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

வேரோடு சாய்ந்துள்ள மரங்கள் மற்றும் மின்கம்பங்களை அகற்றும் பணிகள் போர்க்கால அடிப்படையில் அப்புறப்படுத்தப்பட்டு வருவதாகவும் அறிக்கையில் முதலமைச்சர் கூறியுள்ளார்.

பொதுமக்களை நோயிலிருந்து காப்பாற்றும் வகையில் 372 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஆயிரத்து 14 நடமாடும் மருத்துவ முகாம்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். 84 ஆயிரத்து 436 பேர் மருத்துவ முகாம்கள் மூலம் பயன்பெற்று உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தேவையான மருந்து மற்றும் கிருமி நாசினிகள் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கஜா புயலால் சேதமடைந்த படகுகள் குறித்த விவரங்களை மீன்வளத்துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version