22 கிலோ மீட்டர் வேகத்தில் தமிழகத்தை நோக்கி வருகிறது கஜா – நாகை,காரைக்காலில் 10 ம் எண் புயல் கூண்டு ஏற்றம் 

தமிழகத்தை நோக்கி 22 கிலோ மீட்டர் வேகத்தில் வரும் கஜா புயல் இன்று இரவு 8.30 மணிக்கு அதிதீவிர புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கடந்த 3 நாட்களாக கடலுக்குள் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த கஜா புயல் தற்போது, 22 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்த புயல் அதிதீவிர புயலாக கடலூர் மற்றும் பாம்பன் இடையே கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதனிடையே புயல் எச்சரிக்கையை முன்னிட்டு நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 10ம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடலூர், புதுச்சேரியில் 9 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் 8 ம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை,எண்ணூர் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகங்களில் 3 ம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் இருந்து பாம்பன் வரையில் உள்ள துறைமுகங்களில் 8 முதல் 10 வரையிலான எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதால், அந்த பகுதிகளில் மணிக்கு 100 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனிடையே சென்னையில் இன்று பகலில் இருந்து காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது.

 

 

Exit mobile version