தமிழகத்தில் அரசு மருத்துவமனையில் முதன்முறையாக மூன்றாம் பாலினத்தவருக்கு என தனி பல்நோக்கு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது, திருநங்கைகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மூன்றாம் பாலினத்தவர் நலனுக்காக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனை மற்றும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைகளில் மூன்றாம் பாலினத்தவர் சிகிச்சைக்காக 15 லட்சம் ரூபாய் செலவில் சிறப்பு பிரிவு ஏற்படுத்தப்படும் என தமிழக அரசு கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் அறிவித்தது. அதன்படி கடந்த ஜூன் 3ம் தேதி தொடங்கப்பட்ட சிறப்பு பல்நோக்கு சிகிச்சை மையத்தில், வாரம் தோறும் வெள்ளிக்கிழமை காலை 9 மணிமுதல் மதியம் 1 மணிவரை மூன்றாம் பாலினத்தவருக்கு என பிரத்யேகமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தமிழகத்தில் முதன்முறையாக மூன்றாம் பாலினத்தவருக்கென பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள இந்த சிகிச்சை மையத்திற்கு திருநங்கைகள் தங்கள் வரவேற்பை தெரிவித்துள்ளனர்.
அறுவை சிகிச்சை மேற்கொண்டு பல்வேறு உடல் சார்ந்த பிரச்சினைகளை அனுபவித்து வரும் தாங்கள், எந்தவித கூச்சமும் இன்றி இங்கு சிகிச்சை பெற்று பயன்பெற வேண்டும் என கூறும் திருநங்கைகள், இத்திட்டத்தினை செயல்படுத்திய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
தனியார் மருத்துவமனைகளில் லட்சக்கணக்கில் பணம் செலவு செய்தும் வெளிமாநிலங்களில் சிகிச்சை பெற்றுவந்த நிலை மாறி, தமிழக அரசு இலவசமாக கொண்டு வந்துள்ள பல்நோக்கு சிகிச்சை பிரிவு, திருநங்கைகளுக்கு ஆரோக்கியமான வாழ்வை அளிக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.