சீறிப்பாய்ந்த காளைகள் – தீரத்துடன் அடக்கிய காளையர்கள்!

தமிழகத்தின் இரு வேறு இடங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், சீறிப்பாய்ந்த காளைகளுடன் காளையர்கள் மல்லுக்கட்டியதை, ஏராளமானோர் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

திருச்சி மாவட்டம் தீராம்பட்டியில், புனித வனத்து அந்தோணியார் கோயில் பொங்கலை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், 650 காளைகளும், 400 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். ஆர்டிபிசிஆர் பரிசோதனை சான்றிதழை சமர்ப்பித்த மாடுபிடி வீரர்கள் மட்டுமே போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக மணப்பாறை தாசில்தார் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். இதையடுத்து வாடிவாசலில் இருந்து காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்த காளைகளின் திமிலை பிடித்து அடக்க வீரர்களும் துணிச்சலாக மல்லுக்கட்டினர்.

காளைகளை அடக்கி வெற்றி பெற்ற வீரர்களுக்கும், சீறிப்பாய்ந்து வீரர்களிடம் சிக்காமல் நழுவிய காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. சைக்கிள், மிக்சி, கட்டில், சேர், சில்வர் பாத்திரங்கள், தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் என பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

இதே போன்று, தஞ்சாவூர் மாவட்டம் மாதாகோட்டையில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்புடன் நடைபெற்றது.

இந்த போட்டியில் 250க்கும் மேற்பட்ட காளைகளும், 350 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். முன்னதாக மாடுபிடி வீரர்கள், விழா கமிட்டியினர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் கொடியசைத்து துவக்கி வைத்தார். வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளின் திமிலை பிடித்து அடக்க வீரர்கள் தீரமாக மல்லுக்கட்டினர். காளையர்களின் பிடியில் சிக்காமல் நழுவிச் சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

 

Exit mobile version