மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு மூலம் சேர்ந்த மாணவர்களின் கல்வி கட்டணத்திற்காக, தமிழக அரசு 15 கோடியே 85 லட்சம் ரூபாய் ஒதுக்கி அரசாணை பிறப்பித்துள்ளது.
அரசு பள்ளியில் படித்த மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்கும் விதமாக 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை தமிழக அரசு கொண்டு வந்து சட்டமாக இயற்றியது. இந்த உள் இடஒதுக்கீடு மூலம் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிப்பில் அரசு பள்ளி மாணவர்கள் 209 பேரும், பிடிஎஸ் படிப்பில் 6 பேரும் சேர்ந்தனர். அதேபோல, தனியார் சுயநிதி கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் படிப்பில் 104 பேரும், பிடிஎஸ் படிப்பில் 80 பேரும் உள் இடஒதுக்கீடு மூலம் சேர்ந்தனர்.
இவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இந்த நிலையில் மாணவர்களின் கல்வி கட்டணத்திற்காக 15 கோடியே 85 லட்சத்து 5 ஆயிரத்து 32 ரூபாயை ஒதுக்கி தமிழக அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது. இதில் அரசு கல்லூரி மாணவர்களின் கல்வி கட்டணத்திற்காக 3 கோடியே 10 லட்சம் ரூபாயும், தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு 12 கோடியே 74 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.