தமிழகத்தில் நாளை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு!

தமிழகத்தில் நாளை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால், சந்தை மற்றும் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

கொரோனா பரவலைத் தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் இம்மாதம் இறுதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மதுரை ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகம் முழுவதும் இம்மாத ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு அமலாகிறது. மருந்து மற்றும் பால் விற்பனைக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என்றும், மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே வாகனங்களை பயன்படுத்தலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி, கடைகள் மற்றும் சந்தைகளில் இன்று மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

கடலூர் மாவட்டத்தில் நாளை தளர்வில்லா முழு ஊரடங்கையொட்டி, துறைமுகத்தில் மீன் வாங்க மக்கள் அதிகளவில் குவிந்தனர். மேலும், கடலூர் முதுநகர் மீன்பிடி சந்தையிலும் அதிகளவில் மக்கள் குவிந்தனர். பெரும்பாலான மக்கள் முகக்கவசம் அணிந்திருந்தபோதிலும், சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டமாக கூடினர்.

ஈரோடு வ.உ.சி.பூங்கா விளையாட்டு மைதான வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறிச் சந்தையில், மொத்த வியாபாரிகள் மட்டும் காய்கறி வாங்க அனுமதிக்கப்பட்டிருந்தனர். நாளை தளர்வுகளில்லா முழு ஊரடங்கு என்பதால், பொதுமக்கள் ஏராளமானோர் தங்களுக்குத் தேவையான காய்கறிகளை வாங்கிச் சென்றனர்.

இதேபோல், திருச்சியிலும் நாளை எந்த தளர்வுமின்றி முழு ஊரடங்கு அமலாக உள்ளதால், அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்கள் காய்கறி சந்தை மற்றும் மளிகை கடைகளில் கூடினர். திருச்சியில் நாளை பால் விநியோகம் செய்யவும், மருந்துக் கடைகள் செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version