கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், இன்று தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.
கொடிய தொற்று நோயாக உருவெடுத்துள்ள கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக, நாடு முழுவதும் பல்வேறு தளர்வுகளுடன், வரும் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நோய் தொற்று பரவலை குறைக்கும் வகையில், தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று நள்ளிரவு முதல் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அலுவலகங்கள், வியாபார நிறுவனங்கள் இன்று செயல்படாது. இன்று நாள் முழுவதும் கடைகள் திறக்கப்படாது. அதே சமயம், பால் விநியோகம் மற்றும் மருந்து கடைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதை, அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். ஊரடங்கை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவசியமின்றி பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என தமிழக சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது. இதனிடையே, மதுரையில் கடந்த 5ம் தேதி நள்ளிரவு முதல் அமலில் இருக்கும் முழு ஊரடங்கு, இன்றுடன் முடிவடைவது குறிப்பிடத்தக்கது.