கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில், ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.
இதனால், கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டு, சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
தலைநகர் டெல்லியில் வார இறுதி நாளான இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
ஊரடங்கு காரணமாக, அத்தியாவசிய சேவை வழங்கும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது. ஆங்காங்கே, தடுப்புகளை அமைத்து, காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
அரசின் முன் அனுமதி பெற்ற வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது. விதிகளை மீறி தேவையின்றி சுற்றித்திரிந்தவர்களை பிடித்து அபராதம் வசூலித்தனர்.
மேலும், அத்தியாவசியமின்றி திறக்கப்பட்ட கடைகளுக்கும் அபராதம் விதித்து வருகின்றனர்.
உத்தரபிரதேசத்தில் மே 15ம் தேதி வரை ஞாயிறுதோறும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கான்பூர், மொரதாபாத் உள்ளிட்ட நகரங்களில், சந்தைகள், கடைகள் மூடப்பட்டுள்ளதால், சாலைகளில் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
பொது இடங்களில் முகக்கவசம் இன்றி வருவோருக்கு முதன்முறை ஆயிரம் ரூபாயும், இரண்டாம் முறை பத்தாயிரம் ரூபாயும் அபராதம் வசூலிக்கப்படுகின்றன.
பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் ஞாயிறு முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதால், கடைகள், வணிக வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
இன்றியமையாச் சேவைகளுக்கான வாகனங்களை தவிர பிற வாகனங்களும் அனுமதிக்கப்படாததால், சாலைகள், வீதிகள் வெறிச்சோடிக் காணப்படுகிறது.
இதே போன்று, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களிலும் ஞாயிறு முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால், கடைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டுள்ளன.
மேலும், வாகனப் போக்குவரத்தும் ஆள் நடமாட்டமும் இன்றி, சாலைகள் அமைதியாகக் காணப்படுகிறது.