சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஜூன் 19ம் தேதி முதல் 30 வரை முழு ஊரடங்கு!!!

கொரோனா பரவலை தடுக்க சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் வரும் 19ம் தேதி முதல் 30ம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை மற்றும் அதன் அருகிலுள்ள மாவட்டங்களில் கொரோனா வைரஸ் நோய் பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொதுசுகாதார வல்லுநர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். மருத்துவ நிபுணர்கள் வழங்கிய ஆலோசனை குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விரிவாக விவாதித்தார். அதன் அடிப்படையில், கொரோனா பரவலை தடுக்க, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், 19ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் 30ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள், திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள், திருவள்ளூர் நகராட்சி, கும்மிடிபூண்டி, பொன்னேரி, மீஞ்சூர் பேரூராட்சிகள், பூந்தமல்லி, ஈக்காடு, சோழவரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள், செங்கல்பட்டு, மறைமலைநகர் நகராட்சி, நந்திவரம், கூடுவாஞ்சேரி பேரூராட்சிகள், காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Exit mobile version