கொரோனா பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் இன்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
வேலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு காரணமாக மருத்துவமனைகள், மருந்தகங்கள், பால் நிலையங்கள் தவிர்த்து அனைத்து நிறுவனங்களும், கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதால் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.
சேலத்தில் முழு ஊரடங்கையொட்டி ட்ரோன் காமிரா மூலம் மக்கள் நடமாட்டத்தை காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர். மாநகரின் முக்கிய வணிக பகுதிகளான கடைவீதி, அக்ரஹாரம், குகை, செவ்வாய்பேட்டை, லீ பஜார், மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
மதுரையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் முழு ஊரடங்குக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். மதுரை மாநகரில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மதுரை மாநகரைச் சுற்றியுள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அனுமதியின்றி நகருக்குள் நுழையும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்பட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி, சேயூர், கருவலூர், வேலாயுதம்பாளையம், தேவராயன்பாளையம் உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளில் இறைச்சிக்கடைகள், காய்கறி கடைகள், மளிகை கடைகள், பெட்ரோல் பங்குகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் சாலைகளில் மக்கள் நடமாட்டமோ, வாகன போக்குவரத்தோ இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. நகரின் அனைத்து பகுதிகளிலும் கடைகள், பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் 10 தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. பொது மக்கள் அனைவரும் தங்களை வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டு நோய் பரவாமல் பாதுகாத்து கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.