பரமத்திவேலூர் தாலூக்காவுக்குட்பட்ட செருக்கலை ஏரியில் குடிமராமத்து பணிகள் நிறைவடைந்தநிலையில் திருமணி முத்தாற்றில் தொடர் நீர்வரத்து இருந்ததால் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகாவில் உள்ள 31 புள்ளி 27 ஹெக்டேர் பரப்பளவிலான செருக்கலை ஏரி நீரை பயன்படுத்துவோர் சங்கத்தின் மூலம் 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் செருக்கலை கிராமத்தில் உள்ள ஏரி மற்றும் வழங்கு வாய்க்கால் புனரமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.
இந்தநிலையில் தற்போது பெய்து வரும் தொடர்மழையால் திருமணி முத்தாறில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு காரணமாகவும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளதாலும் செருக்கலை ஏரி விரைவில் தனது முழு கொள்ளளவான 6 புள்ளி 49 மில்லியன் கனஅடியை எட்டி நிரம்பி வழிகிறது.
இதன் மூலம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதால் குடிமராமத்து திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்ட தமிழக அரசுக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். திருமணி முத்தாறில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.