கோமதி மாரிமுத்து..இன்றைக்கு இந்தியாவே உச்சரிக்கக்கூடிய இந்த பெயர் ஒரு கடைக்கோடி கிராமத்து பெண்ணின் வெற்றிக்கு சொந்தமானது. “உனக்கென எழுது ஒரு வரலாறு” என்ற வரிகளுக்கேற்ப வரலாற்றில் தன்னை பதித்து விட்டாள் என்றுதான் சொல்ல வேண்டும்.
திருச்சி மாவட்டம் முடிகண்டம் கிராமம். கிட்டத்தட்ட வெளியுலகத்திற்கு தெரியாத அந்த கிராமத்தை சேர்ந்தவர் தான் கோமதி மாரிமுத்து. பெங்களூருவிலுள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் வேலை பார்த்துவரும் கோமதிக்கு தடகளப்போட்டியில் சாதிக்க வேண்டும் என்ற கனவு உண்டு. இது சிறுவயது கனவு அல்ல. அவருக்கு விளையாட்டில் ஈடுபட விருப்பம் இருந்தது இல்லை. 20 வயதில் திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரியில் படிக்கும் போது எல்லாரும் விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெறும் போது நாமும் சும்மா போய்தான் பார்க்கலாமே… என சென்றவருக்கு அதில் ஆர்வம் வர, தனது அப்பாவிடம் சென்று அதன் பயிற்சி குறித்த விவரங்களைக் கூறி தன்னாலும் அப்படி ஓட முடியும் என கூறியுள்ளார். அவரும் மகளின் விருப்பதிற்கு தடை சொல்லாமல் அதிகாலை 4 மணிக்கே எழுந்து அவரை பயிற்சிக்காக தயார் செய்வாராம். 5.30 மணிக்குள் மைதானத்தில் இல்லை என்றால் கோச் திட்டுவார் என்பதற்காக மைதானமே இல்லாத முடிகண்டத்தில் இருந்து, பாம்புகள் நிறைந்த காட்டுபாதை வழியே மைதானம் நோக்கி செல்வாராம் இந்த தங்க மங்கை.
அவரது அப்பாவே முதல் ரோல் மாடல். எப்படி என்றால் தனக்கு உடல்நிலை சரியில்லாத போதும் தனது மகளின் சம்பளப் பணத்தை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க பயன்படுத்துமாறு கூறியதில் தொடங்கி….சாப்பாட்டுக்கு வழியில்லாமல் மாட்டின் உணவை எடுத்து
சாப்பிட்டது வரை மகளை தங்கமீனாகவே பார்த்து வந்துள்ளார். தனது அப்பா இறக்கும் தருவாயில் கடைசியாக அவரைப் பார்க்க கூடமுடியாமல் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க சென்றது இன்றுவரை கோமதிக்கு வருத்தம் தரும் நிகழ்வுதான்.
“கோமதி மாரிமுத்து” – இந்த பெயர் எப்போதெல்லாம் பேப்பரில் வருகிறதோ அப்போதெல்லாம் அப்பா மகளுக்குள் பெயருக்கான உரிமை கொண்டாடுவதில் செல்ல சண்டையே நடக்குமாம். அவரது அப்பாவிற்கு பிறகு அவரது கோச் சொந்த மகளைப் போல கோமதியை பார்த்துக்கொண்டார். ஆனால் விதியின் வசம் அடுத்த மூன்று மாதங்களில் அவரும் மரணிக்க, கோமதியின் தாயார் ராசாத்தியும், பாப்பாத்தி என்பவரும் தான் அவரின் நம்பிக்கைக்கு தூண்டுகோலாக இருந்துள்ளார். இடையில் 2 வருடங்கள் காயம் காரணமாக போட்டிகளில் பங்கேற்காமலும் இருந்துள்ளார். அலுவலகத்திலும் அவருக்கு மற்ற அலுவலர்கள் சப்போர்ட் பண்ண மீண்டும் தயாரானார்.
கோமதி 2013 முதல் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வந்தார். பல்வேறு போட்டிகளில் வென்று பதக்கங்களை குவித்துள்ள கோமதி 2013ம் ஆண்டு புனேவில் நடந்த ஆசிய தடகளப்போட்டியில் 7வது இடமும், 2015ம் ஆண்டு சீனாவில் நடந்த ஆசிய தடகளப்போட்டியில் 4வது இடமும் பெற்றுள்ளார். தடகளப்போட்டியில் குறிப்பாக 800 மீ ஓட்டத்தில் ரொம்பவே ஸ்பெஷல் கோமதி மாரிமுத்து.
தடகளப்போட்டியில் கோமதிக்கு ரோல் மாடல் இதே தோஹாவில் 2006ல் வெள்ளிப்பதக்கம் வென்ற வீராங்கனை சாந்தி தான். 2019ம் ஆண்டு கத்தார் தடகளப்போட்டியில் பயிற்சியின் போது இவரின் வேகத்தைப் பார்த்து நிச்சயம் முதல் இடம் பிடிக்கலாம் என மற்றவர்கள் உத்வேகம் கொடுக்க, தன்னை மட்டுமல்ல இந்தியாவையே தங்கத்தால் அழகு பார்த்துள்ளார் கோமதி.
இவருக்கு அடுத்தாக செம்டம்பரில் நடைபெறும் உலக அளவிலான தடகளப்போட்டியிலும், அதனைத் தொடர்ந்து ஒலிம்பிக்கிலும் பங்கேற்று பதக்கம் வெல்வதே தன்னுடைய வாழ்நாள் இலக்கு என மகிழ்ச்சி பொங்க தெரிவிக்கிறார் இந்த திருச்சி புயல்.
தற்போது 2.02 மணித்துளிகளில் இலக்கை அடைந்த கோமதி, அதைவிட குறைவாக 1.59 மணித்துளிகளில் கடந்து வெற்றிப் பெற வேண்டும் என்றே நோக்கத்தோடு காத்துக்கொண்டிருக்கிறார்.
ரொம்ப சாதாரணமான குடும்ப பிண்ணனியில் இருந்து வந்த கோமதி இன்று இந்தியாவையே தன் பின்னணியில் வைத்துள்ளார். காரணம் அவரின் உழைப்பு மட்டுமல்ல… விடா முயற்சியும் தான்….!