நாளை முதல் வேட்பாளர்களின் செலவு கணக்குகள் கண்காணிப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்தும் அதற்காக செய்ய வேண்டிய நடைமுறைகள் குறித்தும் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தேர்தல் செலவினங்களைக் கண்காணிப்பது முறைகேடான பண பரிவர்த்தனைகளை தடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சத்யபிரதா சாஹூ, தேர்தல் செலவின பார்வையாளர்கள் நாளை முதல் வேட்பாளர்களின் செலவு கணக்குகளை கண்காணிப்பார்கள் என்றும், தமிழகத்தில் இதுவரை, 1 லட்சத்து 48 ஆயிரம் சுவர் விளம்பரங்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.