சினிமாவும் சமூகமும் பிரிக்க முடியாத இரு அங்கங்கள். சினிமாவின் பார்வை சமூகத்தின் பிரதிபலிப்பாகவே இன்றளவும் பார்க்கப்படுகிறது. சினிமாவின் கதைக்களங்களை எடுத்துக்கொண்டால் காதல், குடும்ப செண்டிமெண்ட் என்பதை தாண்டி அதிகமாக ரசிக்கப்படுபவை பேய் படங்களும், விளையாட்டை மையமாக கொண்ட படங்களும் தான். ஆனால் பேய் படங்களை விட விளையாட்டுக்கான படங்கள் மிக குறைவே. இந்த ஆண்டை எடுத்துக்கொண்டால் வரிசையாக விளையாட்டை மையமாக வைத்த பல படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன.
அதற்குமுன் விளையாட்டை மையமாக வைத்து இதுவரை வந்த படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். தமிழ் சினிமாவில் கில்லி,பத்ரி, எம்.குமரன் போன்ற படங்கள் முழுநீள விளையாட்டை கொண்ட கதைகளாக இல்லாமல் ஒரு பகுதியாகவே இருந்தது. ஆனால் கடந்த பத்து ஆண்டுகளை எடுத்துக்கொண்டால், அதற்கு முன்னதாக இயக்குநர் வெங்கட் பிரபு “சென்னை-28” படத்தின் மூலம் விளையாட்டு சீசனை தொடங்கி வைத்தார் என்று சொல்லலாம். அதன்பிறகு இயக்குநர் சுசீந்திரன் “வெண்ணிலா கபடி குழு” வழியாக செயல்படுத்தினார். அதனை தொடர்ந்து லீ(எ)லீலாதரன், எதிர்நீச்சல், ஜீவா, வல்லினம், இரும்புக்குதிரை, ஈட்டி, இறுதிச்சுற்று, சென்னை28 -2 போன்ற நேரடி தமிழ் படங்களும், சக் தே இந்தியா, மேரி கோம், தங்கல், எம்.எஸ்.தோனி போன்ற பிற மொழிப் படங்களும் அவ்வப்போது வெளிவந்தன.
இதற்கிடையில் பேய் படங்களின் சீசன் ஆரம்பித்து தொடர்ச்சியாக பலப்படங்கள் 2 பாகங்களாக வெளிவந்து தமிழ் ரசிகர்களுக்கு ஒரு வெறுமையை ஏற்படுத்தியது என சொல்லலாம். திடீரென்று தற்போது விளையாட்டை மையப்படுத்தி படங்கள் வெளிவர இருக்கின்றன. கடந்த வருடத்தில் வெளியான “கனா” திரைப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி வந்து வெற்றிப்பெற்றது. இதனை தொடர்ந்து இந்த வருடத்தில் விளையாட்டை மையக்களமாக கொண்டு பல படங்கள் வரவிருக்கின்றன.
அருண்விஜய் நடிப்பில் தடம், ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் நட்பே துணை, தனது பல படங்களில் விளையாட்டை மையமாக வைத்த இயக்குநர் சுசீந்திரன் அடுத்ததாக வெண்ணிலா கபடிக் குழு-2, கென்னடி கிளப் என இரண்டுப் படங்களை என வரிசையாக பல படங்கள் வெளிவரவிருக்கின்றன . இந்த வரிசையில் ஆச்சரியமாக முன்னணி நடிகர் விஜய்யும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் விளையாட்டை மையப்படுத்தியது என தகவல் வெளியானது .
ஆக, இந்த வருடத்தில் தமிழ் சினிமா விளையாட்டில் களமிறங்க இருக்கிறது.