எலி தொல்லைகளில் இருந்து, பயிர்களை காப்பதற்காக பழங்கால முறையை விவசாயிகள் கையாண்டு வருகிறார்கள்!!!

விருத்தாச்சலம் பகுதியில் எலி தொல்லைகளில் இருந்து, பயிர்களை காப்பதற்காக பழங்கால முறையை விவசாயிகள் கையாண்டு வருகிறார்கள். கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் விளைச்சல் சிறப்பான முறையில் இருக்கிறது. தற்போது நெல் சாகுபடியில் முக்கிய கட்டமான பூ பூக்கும் பருவம் தொடங்கியுள்ளதால், பயிரின் தண்டுவடத்தை உண்பதற்காக வயல்களில் எலிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அவ்வாறு எலி தொல்லையில் இருந்து விளைச்சலை காப்பாற்றுவதற்காக விவசாயிகள் பல்வேறு கட்ட முயற்சிகளை கையாண்டு வருகின்றனர். இந்நிலையில் மின்சாரம் இல்லாத காலக்கட்டத்திலும் பயன்படுத்தப்பட்ட பழமையான முறைகளில் ஒன்றான கிட்டி முறையை பயன்படுத்தி தற்போது விவசாயிகள் எலிகளின் தொல்லையை தடுத்து வருகின்றனர்.

மூங்கில் மரத்தின் மூலம் செய்யப்பட்ட முக்கோண வடிவம் கொண்ட இக்கருவியை, விளை நிலங்களில் 4 அடிக்கு ஒன்று என்ற வித்தியாசத்தில், வயலுக்கு ஏற்றார்போல், பல்வேறு அடுக்குகளாக நட்டு வைத்து, அக்கருவியை சுற்றி, எலிகளுக்கு பிடித்தமான அரிசியை தூவுகின்றனர். இரவு நேரத்தில் பயிர்களை தின்பதற்காக வருகின்ற எலிகள், கருவியை சுற்றி கொட்டப்பட்டுள்ள அரிசியை தின்பதற்கு முயற்சி செய்யும்போது, அக்கருவியில் உள்ள பாதுகாப்பு வளையத்தை தொட்டவுடன் எளிதாக மாட்டிக் கொள்கிறது.

தற்போதுள்ள காலகட்டத்தில் எலிகளின் தொல்லைகளில் இருந்து, பயிர்களை காப்பதற்காக வயலைச் சுற்றி, மின்சாரக் கம்பி அமைப்பதால், பல்வேறு விபத்துக்கள் ஏற்படும் என்பதினால், அம்முறைகளை தவிர்த்து, குறைந்த செலவில் கிட்டி முறையை பயன்படுத்துவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version