விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே, புதுச்சேரியிலிருந்து கடத்திவரப்பட்ட ஆயிரத்து 920 மது பாட்டில்களை பறிமுதல் செய்த மதுவிலக்குப் பிரிவு காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில், மது கடத்தல் மற்றும் சாராய விற்பனையை தடுக்க, காவல்துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், மாவட்டம் முழுவதும் சோதனைச் சாவடிகள் அமைத்து, வாகன சோதனையின் மூலம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், பாக்கம் கூட்டுரோடு அருகே, மதுவிலக்கு பிரிவு காவல்துறையினர் சோதனை மேற்கொண்ட போது, அவ்வழியாக வந்த மினி லாரியை நிறுத்திய போது, ஓட்டுநர், வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பியோடியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர், வாகனத்தை சோதனையிட்டபோது, அதில் புதுச்சேரியிலிருந்து அனுமதி இன்றி கடத்திவரப்பட்ட ஆயிரத்து 920 மதுப்பாட்டில்கள், 40 பெட்டிகளில் இருப்பது தெரியவந்தது. உடனடியாக லாரி மற்றும் மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்து, வழக்கு பதிந்து, தப்பியோடிய ஓட்டுநரையும் காவல்துறையினர் தேடிவருகின்றனர்.