அனிதா முதல் ஆதித்யா வரை : பிஞ்சுகளை காவு வாங்கும் NEET

நீட் தேர்வு வேண்டாம் என்று தொடர்ந்து போராடி வருகிறது தமிழக அரசு. ஆனால், டாக்டர் கனவுகளோடு படித்த பிஞ்சுக்குழந்தைகளை இன்றும் காவு வாங்கிக் கொண்டிருக்கிறது நீட் கொடுமை.

டாக்டர் கனவோடு படிக்கும் குழந்தைகளின் கனவை நிறைவேற்றி 69 சதவீத இடஒதுக்கீட்டை அள்ளி வழங்கினார் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா. அக்கிரஹாரங்களிலும், மாடி வீடுகளிகளிலும் இருந்து மட்டுமே வந்துகொண்டிருந்த டாக்டர்கள், குடிசைகளில் இருந்தும் வரத் தொடங்கினர். அதற்கும் வழிவகுத்தது தமிழகம்தான். ஆனால், எதிர்காலத்தில் இதெல்லாம் நடக்குமா? என்ற சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது நீட் எனும் உயிர்கொல்லித்தேர்வு.

கடந்த 2017ம் ஆண்டு முதல் தமிழகத்தில் நீட் தேர்வு என்று அறிவித்தவுடன் தமிழக அரசு கடுமையாக எதிர்த்தது. நீட் தேர்வு முறையில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வகை செய்யும் அவசர சட்டத்தின் வரைவை 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசின் ஒப்புதலுக்கு தமிழக அரசு அனுப்பி வைத்தது. ஆனால், தமிழகத்துக்கு விலக்கு அளிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து நீட்டிற்கு எதிராக வழக்கு தொடர்ந்த அரியலூரைச் சேர்ந்த அனிதா என்ற மாணவி செப்டம்பர் மாதம் தற்கொலை செய்து கொண்டார். நீட்டிற்கு பலியான முதல் பிஞ்சு உயிர் அனிதாதான்.

அனிதாவைத் தொடர்ந்து 2018ம் ஆண்டு நீட் தேர்வுக்கு அடுத்த பலி பிரதீபா. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியைச் சேர்ந்த மாணவி பிரதீபா நீட் தேர்வில் தோல்வியடைந்ததால், தற்கொலை செய்துகொண்டார். இந்த சோக முடிவை தேடிக் கொண்ட பிரதீபாவின் தந்தை ஒரு கூலித்தொழிலாளி. 2019ம் ஆண்டு, நீட் தேர்வில் தோல்வியடைந்த தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த வைசியாஸ்ரீ தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். சாதாரண மீனவ குடும்பத்தில் பிறந்து, டாக்டராக வேண்டும் என்ற கனவுகளுடன் எழுதிய நீட் தேர்வில் வைசியஸ்ரீக்கு குறைந்த மதிப்பெண்ணே கிடைத்தது. மனவேதனை அடைந்த வருங்கால டாக்டர் தேர்வு செய்தது தற்கொலையைத்தான்.

செப் 9-ந் தேதி அரியலூர் மாணவர் விக்னேஷ் தற்கொலை என்ற செய்தி தமிழகத்தில் இடியாய் இறங்கியது. 2 முறை நீட் தேர்வெழுதியும் தேர்வாகாததால், விக்னேஷ் தேடிச் சென்றது ஊருக்கு ஒதுக்குப்புறம் இருந்த கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துக்கொண்டார். மதுரையில் நீட் தேர்வுக்கு படித்துக்கொண்டிருந்த மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். கடந்த ஆண்டு நீட்தேர்வில் தோல்வியைத் தழுவியதால், இந்தாண்டாவது வெற்றிபெற்று டாக்டர் ஆகிவிடுவோம் என்ற கனவில் இருந்த ஜோதி ஸ்ரீ துர்கா பயந்து தற்கொலையைத் தீர்வாகத் தேடிவிட்டார். தற்கொலைக்கு முன், I am Sorry அப்பா, I am சாரி அம்மா…. I am tired என்று ஜோதி எழுதிவைத்த மையின் ஈரம் காய்வதற்குள் தருமபுரியில் இருந்து அடுத்த செய்தி நீட் தேர்வு எழுத இருந்த மாணவர் ஆதித்யா தூக்கிட்டு தற்கொலை. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகேயுள்ள இடையர்புரத்தை சேர்ந்த மாணவர் மோதிலால் நீட் தேர்வு அச்சத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறோம் நாம்.

Exit mobile version