புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

உயர் கல்வித்துறை சார்பில் 103 கோடியே 41 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாகை மாவட்டம் சீர்காழியில் உள்ள எம்.ஜி.ஆர். அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரிக்கு 7 கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கல்விசார் மற்றும் நிர்வாகக் கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சியில் திறந்து வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி அரசு கலை கல்லூரியில் 3 கோடியே 92 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 16 கூடுதல் வகுப்பறைகள், சென்னை காயிதே மில்லத் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 2 கோடியே 24 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 8 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 2 ஆய்வகக் கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

சென்னை மாநிலக் கல்லூரி மற்றும் சென்னை நந்தனம் கலை கல்லூரிகளில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள் மற்றும் ஆய்வகக் கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர், வேலூர், காட்பாடி கோவை, சேலம் மாவட்டம் ஆத்தூர் ஆகிய இடங்களில் உள்ள அரசு கல்லூரிகளுக்கு கூடுதல் வகுப்பறைகள் மற்றும் ஆய்வக கட்டடங்களை முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை, கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் உள்ள அரசு கல்லூரிகள் மற்றும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கட்டப்பட்டுள்ள கல்வியியல் கட்டடங்கள் ஆகியவை திறந்து வைக்கப்பட்டன.

தஞ்சாவூர் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநரகத்திற்கு அலுவலக கட்டடம், தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரிக்கு கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், ஒரத்தநாட்டில் உள்ள அரசு கல்வியியல் கல்லூரிக்கு கூடுதல் வகுப்பறைகள், கும்பகோணத்தில் உள்ள அரசு கல்லூரிக்கு கூடுதல் வகுப்பறைகளை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

இதேபோல், நாகை, புதுக்கோட்டை, திருச்சி, திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள அரசு கல்லூரிகளுக்கு கூடுதல் வகுப்பறைகள் என மொத்தம் 90 கோடியே 91 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

சென்னை பி.எம். பிர்லா கோளரங்கத்தில் 12 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள புதிய மின்னணு கோளரங்க கருவிகளை முதலமைச்சர் துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

பின்பு, சென்னை, திருவள்ளூர், நாமக்கல், திருப்பூர் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் 42 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3 ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகக் கட்டடங்கள், ஒரு வணிகவரி அலுவலக கட்டடம் மற்றும் ஒரு சார்பதிவாளர் அலுவலகக் கட்டடம் ஆகியவற்றை காணொலி காட்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

வணிகவரித்துறை அலுவலகங்களில் பணியாளர்கள் பணிப்புரிவதற்கான உகந்த சூழலை உருவாக்கும் வகையிலும், சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு வந்து செல்லும் பொதுமக்களின் வசதியை கருத்தில் கொண்டும் புதிய கட்டடங்கள் மற்றும் அலுவலக கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது அமைச்சர்கள் ஜெயக்குமார், கே.சி.வீரமணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

 

Exit mobile version